Published : 02 Jul 2020 04:35 PM
Last Updated : 02 Jul 2020 04:35 PM

புதுக்கோட்டை சிறுமி கொலை; கரோனா போலவே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கும் சீர்கெட்டு வருகிறது: ஸ்டாலின் வேதனை 

கரோனா பரவலைப் போலவே தமிழகத்தில் சட்டம் - ஒழுங்குச் சீர்கேடும் படுவேகமாகப் பரவி வருவது கவலையடைச் செய்கிறது என புதுக்கோட்டை சிறுமி கொல்லப்பட்ட விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை அறந்தாங்கி அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கோர சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமியை கடந்த 31-ந் தேதி இரவு முதல் காணவில்லை. இதுதொடர்பாக ஏம்பல் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர்.

போலீஸார் சிறுமியை தேடி வந்த நிலையில் தம்மம் குளத்திற்கு தண்ணீர் செல்லும் வழியில் பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை எஸ்பி அருண் சக்திகுமார் நேரில் வந்து விசாரணை நடத்தினார்.

போலீஸ் விசாரணையில் இந்த வழக்கில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏம்பல் கிராமத்தை சேர்ந்த 25 வயதான பூக்கடை வியாபாரி ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த குற்றச்செயலில் மேலும் சிலருக்கு தொடர்பிருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர்.

சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை பலரும் கண்டித்து வருகின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின் தனது முகநூலில் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அவரது பதிவு:

“புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 7 வயதுச் சிறுமியின் உடல், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில், இரத்தக் காயங்களுடன் வறண்ட குளம் ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது.

ஜூன் 29-ம் தேதி மாலையில் விளையாடச் சென்ற சிறுமி, இரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை என்பதால் அவரது பெற்றோரும் அக்கம் பக்கத்தினரும் தேடியலைந்து ஜூலை 2-ம் தேதி காலையில் உயிரற்ற உடலினை கண்டெடுத்துள்ளார்கள். ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

சில வாரங்களுக்கு முன்புதான், இதே புதுக்கோட்டை மாவட்டத்தில் மற்றொரு சிறுமி படுகொலைக்குள்ளானது தாமதமாக வெளியே தெரிய வந்தது. இப்போது மீண்டும் ஒரு சிறுமி, இத்தகைய சம்பவங்கள் தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.

பெண்கள் - சிறுமிகள் - பொதுமக்களின் பாதுகாப்பு மீது அக்கறை காட்டிட வேண்டும், இத்தகைய கொடூரங்களுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்”.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x