

கரோனா நோயாளிகளுக்கு வீட்டில் இருந்தபடியே மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளிக்கும் டெலிமெடிசின் (Telemedicine) திட்டம் மதுரை மாநகராட்சியில் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னையை போல் மதுரை மக்கள் நெருக்கம் மிகுந்த நெரிசல் நகராக உள்ளது. அதனாலே, சென்னைக்கு அடுத்து இந்த நோய் பரவல் விகிதம் தற்போது மதுரையில் அதிகரித்துள்ளது. மதுரையில் 2 வாரத்தில் 2 ஆயிரம் ‘கரோனா’ நோயாளிகள் அதிகரித்ததால் சிகிச்சை அளிக்க அரசு மருத்துவனைகளில் போதிய மருத்துவக்கட்டமைப்பு வசதிகள் இல்லை.
மதுரை அரசு மருத்துவனையில் நோயாளிகள் குவிந்ததால் ‘கரோனா’ வார்டில் இருந்த 650 படுக்கைகளும் நிரம்பிவிட்டன. தோப்பூர், ரயில்வே மருத்துவமனை, தியாகராசர் பொறியியல் கல்லூரி, வேளாண்மை பல்கலைக்கழக கல்லூரி போன்ற மற்ற ‘கரோனா’ மையங்களில் அறிகுறியில்லாத நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கும் வசதிகள் உள்ளது.
நோய் பாதிப்பு அதிகமுள்ள நோயாளிகள் சிகிச்சை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதால் கடந்த சில வாரமாக உயிரிழப்பு அதிகரித்தது. அதனால், தற்போது முதற்கட்டமாக மாநகராட்சிப்பகுதிகளில் நோய் பாதிப்பு அதிகமுள்ள நோயாளிகளுக்கு மட்டும் அரசு மருத்துவமனை மற்றும் மற்ற ‘கரோனா’ சிகிச்சை மையங்களில் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நோய் அறிகுறி தொந்தரவுகள் இல்லாத மற்ற ‘கரோனா’ நோயாளிகளை வீட்டிலே தனிமைப்படுத்திக் கொண்டு அவர்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகளை வழங்கி மருத்துவக்குழுவினர் ‘வாட்ஸ் அப்’ ஹாலில் தினமும் சென்று மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கும் ‘டெலிமெடிசின்’ திட்டம் மதுரை மாநகராட்சியில் தொடங்கப்பட்டுள்ளது.
தற்போது முதற்கட்டமாக இவர்களில் 200 நோயாளிகளுக்கு தற்போது மாநகராட்சி நிர்வாகம் ‘டெலிமெடிசின்’ முறையில் ‘கரோனா’ மருத்துவ சிகிச்சை வழங்குகிறது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் விசாகன் கூறியதாவது:
வீட்டிலே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற விரும்பும், அதற்கான வசதியுள்ள நோயாளிகளுக்கு உதவுவதற்காக மாநகராட்சி மைய அலுவலகம் 3வது மாடி தளத்தில் ‘டெலிமெடிசின்’ மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
5 மருத்துவர்கள், 18 செவிலியர்கள் உள்பட 23 பேர் இந்த ‘டெலிமெடிசன்’ மருத்துவக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். ஒவ்வொரு நாளும், வெளியாகும் கரோனா நோயாளிகள் பட்டியலில் அவர்களுடைய பெயர், வயது, டெலிபோன் நம்பர், முகவரி இடம்பெற்றுள்ளது.
அவர்களிடம் இந்த மருத்துவக்குழுவினர் ’வாட்ஸ் அப்’ வீடியோ காலில் சென்று விசாரிக்கிறார்கள். அவர்களுடைய மற்ற நோய் தொந்தரவுகள், தற்போது நோய் அறிகுறி எதுவும் இருக்கிறதா என்பதை விசாரித்து அதற்கு தகுந்த மருந்து மாத்திரைகளை வீட்டிற்கே அனுப்பி வைக்கின்றனர். மேலும், அவர்கள் வீட்டிலே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெறுவதற்கான மருத்துவ ஆலோசனைகளை வழங்குகின்றனர்.
ஒரு நாள் மட்டும் இந்த விசாரிப்பு, ஆலோசனை என்றில்லாமல் தினமும் அந்த நோயாளிகளிடம் முந்தைய நாள் பேசிய மருத்துவக்குழுவினரே சுகாதாரத்துறை அறிவுறுத்திய வழிகாட்டுதல்படி 10 நாள் வரை தொடர்ந்து தினமும் வீடியோ ஹாலில் சென்று அவர்கள் உடலனை நலனை விசாரித்து சிகிச்சை, ஆலோசனைகளை வழங்குகின்றனர். உயர் சிகிச்சை தேவைபட்டால் நோயாளிகளை இந்த குழுவினர் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்வார்கள்.
ஸ்மார்ட் மொபைல் இல்லாவிட்டால் அவர்களுடைய சாதாரண மொபைல் நம்பரில் அழைத்து ஆலோசனை வழங்குகின்றனர். அந்த நோயாளிகளின் உடல் முன்னேற்றத்தையும், மாற்றங்களையும் பார்த்து ஒவ்வொரு நாளும் நோயாளிகள் என்ன பன்ன வேண்டும், என்ன மருந்து சாப்பிடுகிறார்கள் என்பது வரை கண்காணிக்கிறார்கள்.
ஒவ்வொரு நோயாளிக்கும் தனித்தனியாக மருத்துவ அறிக்கை தயார் செய்து பராமரிக்கிறார்கள். தற்போது டெலிமெடிசன் திட்டம் சிறப்பாக செயல்படும்பட்சத்தில் கிராமங்களுக்கு விரிவுப்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது, ’’ என்றார்.
மாநகராட்சியின் இந்த திட்டத்திற்கு மக்களிடம் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.