Published : 02 Jul 2020 03:48 PM
Last Updated : 02 Jul 2020 03:48 PM

புதிய காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் முன்னுள்ள கடமைகள்; நிறைவேற்றுவாரா?- எதிர்பார்ப்பில் சென்னை மக்கள்

சென்னை

சென்னை காவல் ஆணையராகப் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் மீது புதிய அழுத்தங்கள் விழுந்துள்ளன. முன்னர் பணியாற்றிய காவல் ஆணையர் பாணியில் தன்னை தகவமைத்து மக்கள் நம்பிக்கையைப் பெறுவாரா? என்கிற எதிர்பார்ப்பில் பொதுமக்கள், காவலர்கள் உள்ளனர்.

சென்னை காவல்துறையில் முக்கியமான பணி சென்னை காவல் ஆணையரின் பணி. பிரம்மாண்டமான பெருநகர் சென்னையின் 1 கோடியை நெருங்கும் மக்களைப் பாதுகாக்கும், சட்டம் ஒழுங்கைக் கடைப்பிடிக்கும் பணியில், மகத்தான பங்கு சென்னை காவல்துறைக்குத் தலைமை தாங்கும் காவல் ஆணையருக்கு உண்டு.

சென்னையின் காவல்துறை செயல்பாடுகள் இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் ஒன்று. இந்தியாவிலேயே பல முன்னோடி அம்சங்களை அறிமுகப்படுத்திய பெருமை சென்னை காவல்துறைக்கு உண்டு. முதல் கைரேகைப் பிரிவு, தடயவியல், மோப்ப நாய் பிரிவு, மகளிர் காவல் நிலையங்கள், பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு நடவடிக்கையில் கூடுதல் கவனம், சைபர் பிரிவு, காவலன் செயலி, சிசிடிவி கேமரா எனப் பல சிறப்புகள் சென்னைக்கு உண்டு.

போக்குவரத்துக் காவல்துறை நவீனப்படுத்தப்பட்டு சிறப்பாகச் செயல்படுவதும், பணமில்லா பரிவர்த்தனை முறையை அமல்படுத்தியதும் சென்னைக்குப் பெருமை சேர்க்கும் விஷயங்கள். சென்னை காவல்துறையில் பணியாற்றுவதை பல அதிகாரிகள் பெருமையாகக் கருதுவார்கள். சென்னை காவல் ஆணையராகப் பணியாற்றுவது அதைவிடப் பெருமையாக ஐபிஎஸ் அதிகாரிகள் மட்டத்தில் பார்க்கப்படுகிறது.

வாழ்க்கையில் ஒருமுறை சென்னை காவல் ஆணையர், தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி ஆவது பல ஐபிஎஸ்களின் லட்சியமாக இருந்துள்ளது. காவல் ஆணையர்களாகவும், டிஜிபிக்களாகவும் பணியாற்றி மக்கள் மனதில் இடம்பிடித்த ஐபிஎஸ் அதிகாரிகள் பலர் உண்டு. நம்மை நம்பும் சாமானிய மக்களைக் காக்க வேண்டும், அதிகாரம் மக்களைக் காக்க, குற்றவாளிகளுக்கு எதிராக என்பதில் உறுதியாக இருந்த அதிகாரிகள் உண்டு.

சென்னை காவல் ஆணையராகப் பலர் அலங்கரித்திருந்தாலும், செய்யும் பணியைவிட மக்களின் பிரச்சினையை காது கொடுத்துக் கேட்ட அதிகாரிகள் மக்கள் மனதில் இன்றும் வாழ்கின்றனர்

இதற்கு அடிப்படையான காரணம் பழக எளிமை, காது கொடுத்துப் பிரச்சினைகளைக் கேட்பது, பதிலளிப்பது ஒன்றே. குறையுடன் வரும் பலரும் தங்கள் குறைகள் நிவர்த்தி செய்யப்படுவதைக் காட்டிலும் முதலில் பரிவுடன் கேட்கப்படுவதைத்தான் அதிகம் எதிரபார்க்கிறார்கள். அதில் உளவியல் உண்மையும் உள்ளது.

சென்னையின் காவல் ஆணையர் பதவியில் பல அதிகாரிகள் அமர்ந்துள்ளனர். காட்சிக்கு எளியவர்களாக, ஆளுகின்ற தரப்பு தவறான முடிவெடுக்கச் சொன்னாலும் அதை மறுத்த அதிகாரிகள், மக்களை, சக அதிகாரிகளைச் சந்திக்க மறுத்த, எட்டாவது மாடியை யாரும் எட்டாத மாடியாக பராமரித்த, ஊடகத்தினர் கருத்தைக்கூட செவி மடுக்காத எனப் பல விதங்களில் அதிகாரிகள் பதவியில் இருந்தனர்.

புகாரைக் காவல் ஆணையருக்குச் சொல்ல, அவரைச் சந்திக்கவே போராட்டம் நடத்தப்பட்ட காலகட்டத்தை எல்லாம் கடந்து சென்னை காவல் ஆணையரகம் வந்துள்ளது. தற்போது புதிய காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்றுள்ளார். இளம் வயதில் 22 வயதில் ஐபிஎஸ் அதிகாரியாக பொறுப்பேற்று பல மாவட்டங்களில் எஸ்.பி.யாக, சென்னை காவல்துறையில் துணை ஆணையராக, சிபிஐ, சிபிசிஐடி, கூடுதல் ஆணையர் சட்டம் ஒழுங்கு எனப் பணியாற்றி நீண்ட அனுபவம் மிக்கவர்.

48 வயதில் அநேகமாக இளம் வயதில் ஆணையர் பொறுப்புக்கு வந்தவர் என்ற பெருமையும் உண்டு. இத்தனை நாள் பல பொறுப்புகளில் இருந்தாலும் ஊடக வெளிச்சம் இவர் மீது விழ வாய்ப்பில்லை. ஆனால் காவல் ஆணையர் பணியில் ஊடக வெளிச்சமும், பணியின் அழுத்தமும் அதிகம் இருக்கும்.

அலுவலக நிர்வாகம் குறித்த அவரது செயல்பாடு குறித்து யாரும் பேச முடியாது. காரணம் ஒவ்வொருவருக்கும் ஒருவித பாணி இருக்கும், பெண்கள், குழந்தைகள் நலனுக்காக சமூகச் செயற்பாட்டாளர்கள், தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து காவல்துறை செயல்படும் என காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பேட்டி அளித்துள்ளது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

பொதுமக்கள் தன்னைச் சந்திக்க தொற்றுநோய் காலத்தில் முடியாததால் வீடியோ கால் மூலம் சந்திப்பேன் என முன்னுரிமை கொடுத்ததும் சிறப்பான ஒன்று. சைபர் க்ரைம் பிரிவை வலுப்படுத்துவேன். அதற்காக அதில் நிபுணத்துவம் உள்ளவர்கள், ஐடி நிறுவனங்கள் துணையுடன் சைபர் பிரிவை மேம்படுத்துவேன் என அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.

காரணம் தற்போதைய காலகட்டத்தில் சைபர் குற்றங்கள் பல விதமான குற்றங்கள், பல வடிவில் பெருகி வருகின்றன. அதற்காக ஏடிஜிபி தலைமையில் தனிப்பிரிவு இருந்தாலும் போகவேண்டிய தூரம் அதிகமுள்ள நிலையில் அத்துறையில் செயல்பட்ட அனுபவமுள்ள காவல் ஆணையர் இவ்வாறு சொல்வது வரவேற்கத்தக்கது. முன்பே சொன்னது போன்று அவரவர் பாணி ஒன்று இருக்கும். அதில் இவர் பாணி இது எனக் கொள்ளலாம்.

ஆனால், அதையும் தாண்டிய ஒரு அழுத்தம் சென்னை காவல் ஆணையர் மீது படிந்துள்ளது. பொதுவாக ஐபிஎஸ் அதிகாரிகள் அவர்கள் எடுக்கும் ரேங்கைப் பொறுத்தும், விருப்ப அடிப்படையிலும் அவர் சார்ந்த மாநிலம் அல்லாமல் வேறு மாநிலத்தில் பணி நியமனம் பெறுவார்கள். இதனால் காவல்துறை, ஆட்சிப் பணியில் உயர் பதவிக்கு வருவோர் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக வேற்று மொழி கொண்டவர்களாக இருப்பர்.

ஆனால், தமிழ் மொழியை ஆட்கொண்டு மக்கள் பணியில் செயல்பட்டு மக்கள் மதிக்கும் அதிகாரிகளாக இருந்துள்ளனர். இதற்கு பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் முன்பும், தற்போதும் பதவியில் உதாரணங்களாக உள்ளனர். தற்போது காவல் ஆணையராகப் பொறுப்பேற்ற அவர் முன் பல முன்னுதாரணங்கள் எதிர்பார்ப்புகளாக உள்ளன.

இதற்கு முன் பணியாற்றிய காவல் ஆணையர்கள் பலர் பலவிதமாக இருந்துள்ளனர். பெயர் குறிப்பிட்டு சொல்வதைக் காட்டிலும் அவரவர் செயல் மூலம் அவர்கள் உயர்ந்து நின்றதைச் சொல்ல முடியும். பெண் காவலர்கள் காவல் பணியில் இயற்கை உபாதைகளுக்கு சிரமப்படுவதைக் கருத்தில் கொண்டு நடமாடும் கழிப்பறையைக் கொண்டு வந்தார் ஒரு ஆணையர் (தற்போது அது உள்ளதா? தெரியாது). காவலர் நலனுக்காக வாரம் ஒருநாள் ஒதுக்கிக் குறைகளைக் கேட்டார் ஒரு ஆணையர். முதல் நாள் குறையைத் தீர்க்க முடியாததால் மறுநாள் தனது ஓய்வு நாளாக இருந்தபோதும் அலுவலகம் வந்து காவலர் குறைகளைக் கேட்டார் ஒரு ஆணையர்.

காவலர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டபோது அவர்களைக் காண நேரில் சென்று நம்பிக்கை ஊட்டி தனிப்பட்ட உதவியும் வெளியில் தெரியாமல் செய்தார் ஒரு ஆணையர். காவலர்கள் பணி நிமித்தமாகவோ, தனது பிரச்சினைக்காகவோ காவல் ஆணையரை சில நிமிடங்களாவது நேரில் சந்திக்க நேரம் ஒதுக்கினார் ஒரு ஆணையர். இவையெல்லாம் காவல் பணியில் நடப்பது.

பொதுமக்கள் புகாரில் மிகுந்த கவனம் செலுத்தி அதைத் தானே நேரில் வந்து காது கொடுத்துக் கேட்டு தினம் அதற்காக நேரம் ஒதுக்கிய ஆணையர்களும் இருந்தனர். பொதுமக்கள் புகாரைக் கேட்க முடியாது எனக் காவல் ஆணையரக பொதுமக்கள் புகார் பிரிவை மூடியவர்களும் இருந்தனர்.

பத்திரிகையாளர்களுடன் பேசும் காவல் ஆணையர்கள், நெருக்கமான, பெரிய பத்திரிகையாளர்களுடன் பேசும் வழக்கம் கொண்ட ஆணையாளர்கள், பத்திரிகையாளர் சந்திப்பையே நடத்தாத ஆணையர்கள், வெளியிலேயே வராமல் மக்களைச் சந்திக்காமல் இருந்த ஆணையர்கள் எனப் பல விதம் உண்டு.

அவரவர் செயல்பாட்டுக்கு ஏற்ப மரியாதையும் மக்கள் மத்தியில் இருந்தது. மற்ற காலங்களைவிட பொதுமக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக இயங்கும் காலகட்டம் இது. சமீபத்திய முன்னுதாரணமாக காவல் ஆணையர் பணியை எளிமையான மக்கள் பணியாக மாற்றி முன்னுதாரணத்தைத் தந்து சென்றுள்ளார் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன். தினமும் செய்தியாளர்கள், பொதுமக்களை ஏதாவது ஒருவகையில் சந்திப்பது, நவீன விஷயங்களைப் பயன்படுத்தி தகவலைத் தெரிந்துகொள்வது என்று செயல்பட்டார்.

அனைவரது கருத்துகளும் காது கொடுத்துக் கேட்கப்பட்டன. குறைகள் உடனடியாகக் களையப்பட்டதன் மூலம் பிரச்சினை பெரிதாவது தடுக்கப்பட்டது. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில அத்துமீறல்கள் போலீஸாரிடையே வந்தபோது தனது காதுக்கு வந்தவுடன் அது உடனடியாகச் சரி செய்யப்பட்டது. பத்திரிகையாளர்கள் எளிதாக அணுகும் வண்ணம் அமைந்ததால் பல பிரச்சினைகள் அதிகாரிகள் அளிக்கும் முன்னரே ஆணையர் பார்வைக்கு வந்தன.

இவை எல்லாம் முன்னுதாரணங்களாக புதிய இளம் காவல் ஆணையர் முன் உள்ளன. எந்தப் பாதையைத் தேர்வு செய்யப்போகிறார் ஆணையர் என்பது அவர் கையில் உள்ளது. மொழி அவருக்குப் பிரச்சினையாக இருந்தாலும் அவரது நெருக்கமான செயல்பாடு மூலம் மக்கள் மனதில் மொழியைக் கடந்து இடம் பிடிக்கலாம்.

சமீபத்திய முன்னுள்ள உதாரணத்தை வைத்துதான் புதிய காவல் ஆணையரை மக்களும், சமூக வலைதளங்களும், போலீஸாரும் பார்ப்பார்கள். அதே பாணி இருக்கவேண்டும் என்று யாரும் சொல்ல முடியாது. அதுபோன்று இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்ல முடியும்.

காவல் ஆணையர் பணியாற்றும் எட்டாவது மாடி, எளிய மக்களின் குறைகள் எட்டும் மாடியாக, குறைதீர்க்கும் மாடியாக இருக்கவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x