காரைக்காலில் கரோனா பரிசோதனை மையம் அமைக்கப்படும்; புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தகவல்

அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.
அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.
Updated on
2 min read

காரைக்காலில் கரோனா நோய்த் தொற்றைக் கண்டறிவதற்கான பரிசோதனை மையம் அமைக்கப்படும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

காரைக்கால் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் இன்று (ஜூலை 2) நடைபெற்றது.

இதில் மாநில அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், எம்.கந்தசாமி, ஆர்.கமலக்கண்ணன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.ஏ.யு.அசனா, கீதா ஆனந்தன், சந்திர பிரியங்கா, சுகாதாரத்துறை செயலர் பிரசாந்த் குமார் பாண்டா, மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா, தொடர்புடைய துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் முதல்வரிடம் எடுத்துக் கூறினார்.

கூட்டத்துக்குப் பின்னர் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"காரைக்கால் மாவட்டத்தில் தற்போது 27 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 27 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டப் பகுதிகளாக உள்ளன. அனைத்துத் தரப்பினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தொடர்புடைய துறைகள் ஒருங்கிணைந்து உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றன.

5 முறை வீடு வீடாகச் சென்று பரிசோதனை செய்துள்ளனர். காரைக்காலில் உள்ள 2 லட்சம் மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகளை திருவாரூருக்கு அனுப்பி, பெற வேண்டியிருப்பதால் முடிவுகள் தெரிய 2 நாட்கள் ஆகின்றன. அதனால் காரைக்கால் பகுதியிலேயே கரோனா தொற்று பரிசோதனை மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகள் இன்னும் ஓரிரு வாரங்களில் தொடங்கி முடிக்கப்படும்.

காரைக்காலில் பரிசோதனைகளை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எவ்வளவு அதிகமாக பரிசோதனை செய்யப்படுகிறதோ அவ்வளவு விரைவில் கரோனா தொற்று பாதிப்பைத் தடுக்க முடியும். அதற்கு தேவையான நிதியுதவி அளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் தரமான உணவு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளுக்கு முதலமைச்சர் கோவிட் நிவாரண நிதியிலிருந்து அரிசி, மளிகைப் பொருட்கள், காய்கறிகள் வழங்கப்படுகின்றன. அதுபோல, காரைக்கால் பகுதியிலும் வழங்க இன்று முதல்வர் அலுவலகத்திலிருந்து உத்தரவு அளிக்கப்படும்.

பாசிக் நிறுவனம், கூட்டுறவு நூற்பாலை உள்ளிட்ட அரசுசார் நிறுவன ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் வரும் பட்ஜெட்டில் நடவடிக்கை எடுக்கப்படும். காரைக்காலில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதால் கரோனா தொற்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இது குறைக்கப்படவேண்டும்.

புதுச்சேரியின் 4 பிராந்தியங்களிலும் காரைக்கால் மாவட்டத்தை கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக முதன்முதலாக அறிவிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அதைச் செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. தற்போதுள்ள சில குறைகளை நிவர்த்தி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. மாநிலத்தின் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடமிருந்து போதுமான நிதியுதவி கிடைக்கவில்லை. அதனால் மாநில அரசால் நிவாரண உதவிகளை செய்வதற்கே சிரமம் உள்ளது. இந்தச் சூழலில் மாநில அரசு வரிப் பணத்தை நம்பி ஆட்சி நடத்த வேண்டிய நிலை இருப்பதால் மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் எவ்வித தொல்லையும் கொடுக்காமல் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும் என, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக மாவட்ட நிர்வாகத்துக்கும், ஆட்சியருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்".

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in