Published : 02 Jul 2020 02:44 PM
Last Updated : 02 Jul 2020 02:44 PM

உயர் சாதியினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10% இட ஒதுக்கீடு கூடாது; தமிழக அரசு கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும்: கி.வீரமணி

கி.வீரமணி: கோப்புப்படம்

சென்னை

உயர் சாதியினரில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10% இடஒதுக்கீடு கூடாது என்பதை தமிழக அரசு கொள்கை முடிவாக எடுத்து நீதிமன்றத்தில் அறிவிக்க வேண்டும் என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, கி.வீரமணி இன்று (ஜூலை 2) வெளியிட்ட அறிக்கை:

"இந்திய அரசியல் சட்டத்தின் முதலாவது சட்டத் திருத்தம் வந்தது ஏன்? தமிழ்நாட்டில் 1928 முதல் நீதிக்கட்சி ஆட்சியால் நீண்ட காலம் அமலில் இருந்து வந்த கம்யூனல் ஜி.ஓ. என்ற வகுப்புரிமை ஆணையை எதிர்த்து, இந்திய அரசியல் சட்டம் 1950 ஜனவரியில் அமலுக்கு வந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தவறான தகவல்களை நீதிமன்றத்திற்குக் கொடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு, அது செல்லாது என்று தீர்ப்புப் பெற்றவர்கள், கல்வி, வேலைவாய்ப்பில் ஏகபோகத்தை அனுபவித்து வந்தவர்களே! அன்றைய உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டிலும் அந்தத் தீர்ப்பு உறுதிப்படுத்தப்பட்டது. சமூக நீதி பறிக்கப்பட்டதை எதிர்த்து, பெரியார் மக்கள் மன்றத்தைத் திரட்டி நடத்திய மாபெரும் கிளர்ச்சியும், போராட்டமும் மத்திய அரசினைச் சிந்திக்க வைத்தது.

பிரதமர் நேருவும், சட்ட அமைச்சர் அம்பேத்கரும் முதலாவது அரசியல் சட்டத் திருத்தம் தொடர்பாக அன்றைய நாடாளுமன்றத்தில் கொணர்ந்து நன்கு விவாதித்தனர். ஆளும் காங்கிரஸ் கட்சியே ஆதரவு அளித்தது. பிரதமர் நேரு தெளிவாக, தென்னாட்டுப் போராட்டத்தை விளக்கி, திருத்தத்தை முன்மொழிந்து, நிறைவேற்றி, அம்பேத்கரைக் கலந்து முடிவெடுத்ததன் விளைவே, கல்வி வாய்ப்பில் விடுபட்டிருந்த இடஒதுக்கீட்டுக்கான பிரிவாக 15(4) என்பது அடிப்படை உரிமைகள் பகுதியில் புகுத்தப்பட்டது.

சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் என்ற அளவுகோலே சரி!

1. பிற்படுத்தப்பட்டோரை அடையாளப்படுத்தும் வகையில், சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் என்ற சொற்கள் இணைக்கப்பட்டன. பொருளாதார அடிப்படை பற்றி சிலர் கூறியபோது, அது நிலையான அளவுகோல் அல்ல; அடிக்கடி மாறக் கூடியது. சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் என்ற அளவுகோலே இழைக்கப்பட்ட சமூக அநீதிக்குப் பரிகாரம், மாற்று என்பதையும் சுட்டிக்காட்டினர்.

எம்ஜிஆர் கொண்டு வந்த பொருளாதார அளவுகோல் பின்வாங்கப்பட்டது - ஏன்?

2. பிறகு வந்த பல உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின் விளக்கத்தில் இட ஒதுக்கீடு என்பது ஏழ்மையை ஒழிக்கும் திட்டம் அல்ல; முன்பு காலங்காலமாய் சாதி அடிப்படையில் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்பளிக்கும் உரிமை என்றும் விளக்கப்பட்டது.

அதுமட்டுமல்ல, 1977 ஆம் ஆண்டில், எம்ஜிஆர் அதிமுகவின் சார்பில் முதல்வராக வந்தபோது, பிற்படுத்தப்பட்டோருக்குக் கொடுக்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டில், ஆண்டு வருமானம் 9,000 ரூபாய் என்ற ஓர் அளவுகோல் ஆணையைப் பிறப்பித்த போது, திராவிடர் கழகம், திமுக, இந்தியக் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளும், காங்கிரஸ் கட்சி, ஜனதா கட்சியில் சில தலைவர்களும் இணைந்து கடுமையாக எதிர்த்ததோடு, நாடாளுமன்றத் தேர்தலில் எம்ஜிஆரின் அதிமுக படுதோல்வி அடைந்தது.

பிறகு, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அந்த ஆணையை பொருளாதார அளவுகோல் 9,000 ரூபாய் வருமான வரம்பு ஆணையை எம்ஜிஆர் அரசு ரத்து செய்தது.

3. மண்டல் கமிஷன் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, மத்திய காங்கிரஸ் அரசு கொணர்ந்த உயர் சாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு ஆணையும் அரசியல் சட்ட விரோதம், செல்லாது என்று தீர்ப்பளித்து ரத்து செய்தது!

103 ஆவது சட்ட திருத்தம் என்பது என்ன?

4. ஆனால், இதையெல்லாம்பற்றிக் கவலைப்படாமல், உயர்சாதியினர், வடநாட்டில் சில மாநிலங்களில் வாக்கு வங்கி பெற்றுள்ள உயர்சாதியைச் சேர்ந்த மற்றவர்களும் 10 சதவிகித இட ஒதுக்கீடு தரும் சட்டத்தை, பொதுத் தேர்தல் 2019 இல் வருவதற்கு முன்பு, இரண்டொரு நாளில், நாடாளுமன்றத்திற்கு அவகாசமே தராமல், 103 ஆவது அரசியல் சட்டத் திருத்தமாக நிறைவேற்றி, அதற்காக இடங்களைக் கூட்டி, நிதிகளையும் அதிகரித்தனர். உச்ச நீதிமன்றத்திலும், சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்குகள் நிலுவையில் உள்ளன!

தமிழ்நாடு, சமூக நீதிக்கு இந்தியாவுக்கே கலங்கரை வெளிச்சமாகி வழிகாட்டும் மாநிலம் ஆகையால், இதில் தெளிவான நிலை, 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு பலத்த எதிர்ப்பு, திராவிடர் இயக்கம் முதல் அத்தனை கட்சிகளும் எதிர்க்கும்.

சென்ற ஆண்டு ஜூலையில் 3,000 இடங்களை மருத்துவக் கல்விக்குக் கூடுதலாக தமிழ்நாட்டுக்குத் தருகிறோம் என்று நாக்கில் தேன் தடவியபோதுகூட, தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், அதற்கு ஆதரவான முடிவு எடுக்கவில்லை. காரணம், பெரும்பாலான கட்சிகள் திராவிடர் கழக வழிகாட்டலில் எதிர்க்கவே செய்தன!

10 சதவிகித இட ஒதுக்கீட்டை எதிர்ப்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும்

இன்னமும் ஆளுங்கட்சியான அதிமுக இதில் உறுதியாக இருப்பதால், 10 சதவிகிதத்தை ஏற்க இயலாது என்ற நிலையை எடுத்துள்ளது. இந்த 10 சதவிகித பொருளாதார அளவுகோல் இட ஒதுக்கீடு என்பது சமூக நீதியின் அடிப்படையின் வேரில் வெந்நீர் ஊற்றுவது என்ற கட்சிகளின் பொதுக் கருத்தை கருத்திணக்கத்தை ஏற்றுக்கொண்டது தமிழக அரசு.

உயர் நீதிமன்றத்தில் உயர் சாதியினரும், மற்ற சிலரும் வழக்குப் போட்டுள்ளனர். தமிழக அரசால் அமைக்கப்பட்ட மூத்த அமைச்சர்கள் குழு இது அரசின் கொள்கை முடிவு என்று திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும். இது அவசியமும், அவசரமும்கூட!

ஏற்கெனவே காட்டியுள்ள உறுதியிலிருந்து தமிழக அரசு எக்காரணம் கொண்டும் பின்வாங்கக் கூடாது; மக்கள் மன்றம் கூர்ந்து கவனித்துக் கொண்டுள்ளது!

'அம்மா ஆட்சி, எம்ஜிஆர் ஆட்சி' என்றால், பொருளாதார அடிப்படையில் ஏற்க மாட்டோம் என்று திட்டவட்டமான கொள்கை முடிவினை எடுத்து, உயர் நீதிமன்றத்தில் அறிவித்து, அதனை ஏற்காத இன்றைய நிலையிலிருந்து பின்வாங்கவே கூடாது!

இப்போது காட்டும் உறுதியான 10 சதவிகித இட ஒதுக்கீடு முன்னேறிய சாதியினருக்கு என்ற நிலைப்பாட்டை எதிர்ப்பது சமூக நீதியைப் பாதுகாப்பது ஆகும். 'பசியேப்பக்காரனுக்குத் தான் பந்தியில் இடமே தவிர, புளியேப்பக்காரனுக்கு அல்ல' என்பதுதான் நியாயம்!

உயர் சாதியில் பொருளாதாரத்தில் நலிந்தோருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு என்பது, கிரீமிலேயரை ஏற்காத மாநிலம் தமிழகம் என்பதையே புரட்டி, தலைகீழாக்கிவிடும் ஆபத்தும் நுழைந்துவிடும்.

எம்ஜிஆர், ஜெயலலிதா காட்டிய வழியிலிருந்து தடம் புரளக்கூடாது!

உறுதியான நிலைப்பாட்டில் இருந்து தமிழ்நாடு அரசு மாறினால், கடுமையான விலையைத் தரவேண்டியிருப்பதோடு, அதன் முன்னோர்கள் காட்டிய எம்ஜிஆர், ஜெயலலிதா வழியிலிருந்து தடம் புரண்டவர்களாவார்கள் என்பதையும் நினைவூட்டுகிறோம்.

எனவே, தெளிவான, உறுதியான நிலைப்பாட்டை எடுத்து, சமூக நீதி மண்ணின் தனித் தன்மையைக் காப்பாற்றட்டும்".

இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x