

குற்றமற்ற சரகமாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என, டிஐஜி கே.எழிலரசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
விழுப்புரம் சரக டிஐஜியாகப் பதவி வகித்த சந்தோஷ்குமார் ஐஜி (நிர்வாகம்) பதவி உயர்வு பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து, சென்னை இணை ஆணையராக (போக்குவரத்து) பதவி வகித்த கே.எழிலரசன் பணி மாறுதலில் விழுப்புரம் சரக டிஐஜியாக இன்று (ஜூலை 2) பொறுப்பேற்றுக்கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "எனது சொந்த ஊர் புதுச்சேரி. பிஎஸ்சி தோட்டக்கலை படித்து 2004-ம் ஆண்டு காவல் பணியில் சேர்ந்தேன். விழுப்புரம் சரகமான கடலூர், விழுப்புரம் மாவட்டத்தைக் குற்றமற்ற சரகமாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்" என்றார்.
முன்னதாக, சென்னை பாதுகாப்பு துணை ஆணையராக பதவி வகித்த எஸ்.ராதாகிருஷ்ணன் இன்று விழுப்புரம் எஸ்.பி.யாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "விழுப்புரம் மாவட்டத்தில் காவல்துறையும் பொதுமக்களும் நல்லுறவோடு செயல்பட முதல் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் குறைகளைத் தீர்ப்பதில் முழு கவனம் செலுத்தப்படும். பொதுமக்கள் எந்த நேரத்திலும் தங்கள் குறைகளைக் கூறுவதற்கு என்னைத் தொடர்பு கொள்ளலாம். காவல்துறை எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் பொதுமக்களின் நன்மைக்காகவும் அவர்களின் பாதுகாப்புக்காகவும் எடுக்கின்ற நடவடிக்கையாகவே இருக்கும்.
விழுப்புரம் மாவட்டத்தில் சட்டத்தை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறை பொதுமக்கள் விரும்பும் துறையாக, காவலர்கள் பொதுமக்களின் நண்பர்களாக எப்பொழுதும் இருப்பதற்கான வழிமுறைகள் அமைக்கப்படும். விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்கள் ஏற்கெனவே எனக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததுபோலவே இப்பொழுதும் ஒத்துழைக்க விரும்புகிறேன்.
காவல் பணி என்பது யாருக்கும் பாரபட்சம் காட்டாமல் நீதியை நிலைநாட்டுவதிலும் சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதில் மட்டுமே இருக்கும். சட்டத்தை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். விழுப்புரம் மாவட்டத்தில் 'ரவுடி' கலாச்சாரம் முற்றிலும் ஒழிக்கப்படும்" என்றார்.