

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் பெண்ணின் வயிற்றில் இருந்த 8.75 கிலோ கட்டி அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டது.
சென்னை கொருக்குப்பேட்டை யை சேர்ந்தவர் பாப்பம்மாள் (55). பசியின்மை, எடை குறைதல், வயிற்று வலியால் பாதிக்கப்பட்டவர் சென்னை அரசு ஸ்டான்லி மருத் துவமனைக்கு வந்தார். மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்து பார்த்தபோது, அவரது வயிற்றில் மிகப்பெரிய கட்டி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து மருத்துவமனை கண்காணிப்பாளரும், மகளிர் மருத்துவத் துறை தலைவர் பி.வசந்தாமணி தலைமையில் மருத்துவர்கள் அனிதா, எழிலரசி ஆகியோர் கொண்ட குழுவினர் அறுவை சிகிச்சை செய்து, பாப்பாம்மாள் வயிற்றில் இருந்த 8.75 கிலோ கட்டி, கர்ப்பப்பையை வெற்றிகரமாக அகற்றினர். இந்த அறுவை சிகிச்சை ஒன்றரை மணிநேரம் நடந்தது.
இதுதொடர்பாக நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மருத்துவமனை டீன் ஐசக் கிறிஸ்டியன் மோசஸ், ஆர்எம்ஓ டாக்டர் ரமேஷ் கூறியதாவது:
வயிற்றில் ஒருபுறம் கட்டி வந்தால், மறுபுறமும் வர வாய்ப்பு உள்ளது. அதனால் முன்னெச்சரிக்கையாக பாப்பம் மாளின் கர்ப்பப்பையையும் அகற்றி விட்டோம். முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம் இந்த அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டுள்ளது. இதை தனியார் மருத்துவமனையில் செய்ய ரூ.3 லட்சம் வரை செலவாகும்.
பெண்களுக்கு 40 முதல் 50 வயதுக்குள் கட்டிகள் வர வாய்ப்பு உள்ளது. இவற்றில் 30 சதவீதம் சாதாரண கட்டிகளாக இருக்கும். பாப்பம்மாளின் வயிற்றில் இருந்து அகற்றப்பட்ட கட்டி புற்றுநோய் கட்டியா என்பதைக் கண்டறிய பரிசோதனை நடந்துவருகிறது. சிறு வயதிலேயே பருவம் அடைவது, 50 வயதை தாண்டி யும் மாதவிலக்கு வருவது, குழந்தையின்மை போன்ற காரணங்களால் புற்றுநோய் கட்டி வர வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மருத்துவர்கள் பி.வசந்தாமணி, அனிதா உடன் இருந்தனர்.