Published : 02 Jul 2020 11:43 AM
Last Updated : 02 Jul 2020 11:43 AM

சென்னையின் புதிய காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்றார்

சென்னையின் புதிய காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அவரிடம் பொறுப்பை ஒப்படைத்து விடை பெற்றுக்கொண்டார்.

சென்னை காவல் ஆணையராக 2017-ம் ஆண்டு மே மாதம் 15-ம் தேதி ஏ.கே.விஸ்வநாதன் பொறுப்பேற்றார். 3 ஆண்டு 45 நாட்கள் அவர் பொறுப்பிலிருந்தார். அவரது பணிக்காலத்தில் பொதுமக்களுடன் இணைந்து பணியாற்றும் காவல் ஆணையராகப் பெயர் பெற்றார். கண்காணிப்பு கேமரா நிறுவியது, காவலன் செயலி, ஃபேஸ் டேக்கர் எனக் காவல்துறையில் பல்வேறு முறைகளை அமல்படுத்தி குற்ற எண்ணிக்கையைக் குறைத்தார்.

பொதுமக்களைக் கண்ணியமாக நடத்த வேண்டும், சட்டப்படி நடக்க வேண்டும் என்பதில் உறுதியான காவல் ஆணையராக இருந்தார். இந்நிலையில் நேற்று முன் தினம் காவல் ஆணையர் உட்பட 39 காவல் அதிகாரிகள் மாற்றப்பட்ட நிலையில் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனும் மாற்றப்பட்டார். செயலாக்கப் பிரிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

நேற்று அவர்கள் பதவி ஏற்காத நிலையில் இன்று காலை 10.45 மணியில் மகேஷ்குமார் அகர்வால் பதவி ஏற்றார். அவருக்கு வாழ்த்துத் தெரிவித்த காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், அவரிடம் பொறுப்பை ஒப்படைத்தார். பின்னர் முறைப்படி காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அவருக்கு காவல் உயர் அதிகாரிகள் வாழ்த்துத் தெரிவித்தனர்.

மகேஷ்குமார் அகர்வால் 1994-ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி. சென்னையின் கூடுதல் காவல் ஆணையராகவும் பணியாற்றியுள்ளார். இவர் சட்டம் பயின்றவர். சொந்த மாநிலம் பஞ்சாப் ஆகும். தந்தையும் வழக்கறிஞர் என்பதால் சட்டம் பயின்று பின்னர் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி 22 வயதில் ஐபிஎஸ் அதிகாரியாகப் பொறுப்பேற்றார்.

தேனி எஸ்.பி., தூத்துக்குடி எஸ்.பி., 2001-ல் சென்னை பூக்கடை துணை ஆணையர், சென்னை போக்குவரத்து காவல் தெற்கு துணை ஆணையர் எனப் பொறுப்பு வகித்த மகேஷ்குமார் அகர்வால், பின்னர் சொந்த மாநிலமான பஞ்சாப் மாநிலத்தில் சிபிஐ எஸ்.பி.யாக அயல் பணியில் சென்றார்.

7 ஆண்டுகள் சிபிஐ அதிகாரியாக பஞ்சாப், ஹரியாணா, ஜம்மு காஷ்மீரில் பணியாற்றியுள்ளார். பின்னர் ஐஜியாகப் பதவி உயர்வுபெற்று தமிழகம் திரும்பிய மகேஷ்குமார் அகர்வால், சிபிசிஐடி ஐஜியாகப் பதவி வகித்தார். பின்னர் மதுரை காவல் ஆணையராகச் சென்றார். மீண்டும் சிபிசிஐடி ஐஜியாகப் பதவி ஏற்றார்.

பின்னர் சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையராகப் பொறுப்பேற்றார். பின்னர் செயலாக்கப் பிரிவு ஏடிஜிபியாக இருந்த மகேஷ்குமார் அகர்வால், தற்போது சென்னையின் இளம் காவல் ஆணையராகப் பொறுப்பேற்றுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x