Published : 02 Jul 2020 11:13 AM
Last Updated : 02 Jul 2020 11:13 AM

காய்ச்சல் அறிகுறி இருந்தால் கரோனா ஆய்வைக் கட்டாயமாக்க வேண்டும்; தனியார் மருத்துவமனைகளில் புறநோயாளிகளுக்கும் கரோனா பரிசோதனை அவசியம்: ராமதாஸ்

ராமதாஸ்: கோப்புப்படம்

சென்னை

காய்ச்சல் அறிகுறி இருந்தால் கரோனா ஆய்வு செய்வதைக் கட்டாயமாக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஜூலை 2) வெளியிட்ட அறிக்கை:

"தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், தனியார் மருத்துவமனைகளின் புறநோயாளிகள் பிரிவில் காட்டப்படும் அலட்சியம் காரணமாக தேவையில்லாமல் உயிரிழப்புகள் ஏற்படுவது கவலையளிக்கிறது. சிறு அலட்சியம் உயிரைப் பறிக்கும் என்பதை உணர்ந்து கவனமாகச் செயல்படாவிட்டால் உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்த இயலாது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியைச் சேர்ந்த விநாயகம் என்ற 42 வயது இளைஞர் கவுதம் ஜுவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை நடத்தி, கடுமையான உழைப்பு காரணமாக வாழ்க்கையில் முன்னேறி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் அவருக்குக் காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், உடனடியாக உள்ளூர் தனியார் கிளினிக் ஒன்றில் சிகிச்சை பெறச் சென்ற போது, அவருக்கு சாதாரண காய்ச்சல் மட்டுமே ஏற்பட்டிருப்பதாகக் கூறி, அதற்கான மாத்திரைகளைப் பரிந்துரைத்துள்ளனர். அந்த மாத்திரைகளைச் சாப்பிட்ட போதிலும், காய்ச்சல் குணமடையாத நிலையில், அருகிலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவுக்குச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு கரோனா சோதனை செய்யாமல் டைபாய்டு காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாகக் கூறி அதற்கான மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டன.

டைபாய்டு காய்ச்சலுக்கான மருந்துகளை உட்கொண்ட பிறகும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், இன்னொரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு விநாயகம் சென்றுள்ளார். அங்கும் அதே நடைமுறைகள் செய்யப்பட்டு, காய்ச்சலுக்கான மருந்துகளே பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அப்போதும் காய்ச்சல் குறையாத நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு அவரைத் தனிமைப்படுத்தி கரோனா ஆய்வு செய்ததில் அவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக தீவிர மருத்துவம் அளிக்கப்பட்ட போதிலும், அவருக்கு நோய் முற்றியிருந்ததால், அவரைக் காப்பாற்ற முடியவில்லை; சில நாட்களுக்கு முன் உயிரிழந்து விட்டார்.

விநாயகம் முதன்முதலில் உள்ளூர் தனியார் மருத்துவமனைக்குச் சென்றபோதோ அல்லது அடுத்து தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்ற போதோ அங்கு அவருக்கு கரோனா வைரஸ் சோதனை செய்யப்பட்டிருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்க முடியும். ஆனால், புறநோயாளி என்பதால் அவருக்குக் கரோனா ஆய்வு செய்வதற்கு மாற்றாக, மருத்துவமனையில் சாதாரண டைபாய்டு காய்ச்சலுக்கான சோதனை செய்து, அதற்கான மருந்துகளை மட்டும் கொடுத்ததால்தான், அவருக்கு ஏற்பட்டிருந்த கரோனா நோய் முற்றி உயிரிழக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. தனியார் மருத்துவமனைகளின் அலட்சியத்தால், இப்போது ஒரு குடும்பம் தலைவனை இழந்து தவிக்கிறது.

காய்ச்சல், சளி, இருமல், தும்மல், சுவை மற்றும் மணத்தை உணரும் தன்மையின்மை உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஓரிரு அறிகுறிகள் தென்பட்டால் கூட, உடனடியாக கரோனா சோதனை செய்து கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இந்த விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படுவதற்கு முன் மருத்துவர்களுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும்.

காய்ச்சல் என்பது கரோனா வைரஸுக்கான அறிகுறி என்பதால், காய்ச்சலுடன் ஒருவர் எந்த மருத்துவமனைக்கு வந்தாலும், அவருக்கு கரோனா ஆய்வு செய்வதுதான் முதல் பணியாக இருக்க வேண்டும். ஆனால், அதைக் கடைப்பிடிக்காமல் அலட்சியமாக இருந்ததால், எந்தத் தவறும் செய்யாத அப்பாவி இளைஞர் ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.

தனியார் மருத்துவமனைகளின் புறநோயாளிகள் பிரிவில் காட்டப்படும் அலட்சியத்தால் இளைஞர் உயிரிழந்தது இது மட்டுமே தனித்த நிகழ்வாக இருக்க வாய்ப்பில்லை. சரியான நேரத்தில் கரோனா ஆய்வு செய்யாததால் விநாயகத்தைப் போல பலர் உயிரிழந்திருக்கக்கூடும். இது தடுக்கப்பட வேண்டும்.

பொதுவாகவே சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் காய்ச்சலால் பாதிக்கப்படும் பொதுமக்கள் சோதனைக்காக அருகிலுள்ள ஆய்வகங்களுக்குச் செல்லும்போது, அவர்களுக்கு கரோனா ஆய்வு செய்யப்படுவதில்லை. சம்பந்தப்பட்ட ஆய்வகங்களில் அந்த வசதி இல்லை என்றால் அருகிலுள்ள ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். ஆனால், அவை எதையும் செய்யாத தனியார் ஆய்வகங்கள், ரத்த ஆய்வு மட்டும் செய்துவிட்டு டைபாய்டு காய்ச்சல் இருப்பதாகக் கூறி அனுப்பி விடுகின்றனர். இது தொடர்பாக ஏராளமான புகார்கள் பொதுமக்களிடமிருந்து எனக்கு வருகின்றன.

தனியார் மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாகச் சேர வருபவர்களுக்கு முதல் பணியாக கரோனா ஆய்வு செய்யப்பட்டு, அதன்பிறகுதான் மருத்துவனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். அதே நடைமுறை புறநோயாளிகளுக்கும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். ஒருவேளை சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் கரோனா ஆய்வு செய்யும் வசதி இல்லை என்றால், அருகிலுள்ள கரோனா ஆய்வு மையத்திற்கு சம்பந்தப்பட்ட நபர்கள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

இது தொடர்பாக அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள புறநோயாளிகள் பிரிவுகளுக்கும் தமிழக அரசு சுகாதாரத்துறை சார்பில் உரிய அறிவுரைகளும், வழிகாட்டுதல்களும் வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்".

இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x