Last Updated : 15 Sep, 2015 05:55 PM

 

Published : 15 Sep 2015 05:55 PM
Last Updated : 15 Sep 2015 05:55 PM

புதுச்சேரி மாநிலங்களவை தேர்தலில் திருப்பம்: அரசு கொறடா பதவியை ராஜினாமா செய்த எம்எல்ஏ

புதுச்சேரி மாநிலங்களை எம்.பி.க்கான தேர்தல் வருகிற 28-ம் தேதி நடக்கிறது. ஆனால், இதுவரை என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்கவில்லை.

என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முதல்வருமான ரங்கசாமி அக்கட்சியின் வேட்பாளர் யார் என்று அறிவிக்காததால் ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்நிலையில் அரசு கொறடா பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை ஆளுங்கட்சி எம்எல்ஏ நேரு இன்று அளித்தார்.

புதுச்சேரியில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ரங்கசாமி, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றார். அதையடுத்து அதிமுகவை கழற்றிவிட்டு, சுயேட்சை எம்எல்ஏ ஆதரவுடன் ஆட்சியை அமைத்தார்.

ஆட்சி அமைந்த மூன்றரை ஆண்டுகளாக நலத்திட்டங்களை செய்ய முடியாததற்கு காரணம் மத்திய அமைச்சராக இருந்த நாராயணசாமிதான் என்று முதல்வர் ரங்கசாமி குற்றம் சாட்டி வந்தார்.

மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தார். அத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் வென்றார்.

அதற்குப் பிறகு, முதல்வர் ரங்கசாமி டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். முதல்வர் ரங்கசாமி விடுத்த கோரிக்கைகளை பாஜக நிறைவேற்றாததால் டெல்லி செல்வதை ரங்கசாமி தவிர்த்தார்.

அதையடுத்து ராஜ்யசபா வேட்பாளர் பதவியை பாஜக கேட்டது. ஆனால், அதற்கு முதல்வர் மறுத்துவிட்டார்.

இதையடுத்து ராஜ்யசபா தேர்தல் அறிவிப்பு வெளியாகியும், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பதை முதல்வர் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் சட்டப்பேரவைக்கு இன்று நண்பகல் அரசு கொறடா நேரு வந்தார். அப்போது எதிரே நடந்து வந்த முதல்வர் ரங்கசாமி காரில் சென்று அமர்ந்தார். அதையடுத்து முதல்வரிடம் ஒரு கடிதத்தை அளித்து விட்டு சபாநாயகர் சபாபதி அறைக்கு நேரு சென்றார். அங்கு அவர் இல்லாததால் அலுவலகத்தில் கடிதம் தந்தார்.

அதையடுத்து நேரு கூறியதாவது:

அரசு கொறடா பதவியை ராஜினாமா செய்வதாக முதல்வரிடமும், சபாநாயகர் அலுவலகத்திலும் கடிதம் தந்துள்ளேன். கட்சியிலுள்ள எம்எல்ஏக்களை ஒருங்கிணைக்கும் வேலையை செய்ய முடியாததால் இக்கடிதம் தந்துள்ளேன்.

எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டி எம்பி வேட்பாளர் தொடர்பாக பேசுங்கள் என முதல்வரிடம் இரு வாரமாக தெரிவித்தும் பலனில்லை. தற்போது பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டால் கண்டிப்பாக ஆதரிப்பேன். அப்போதுதான் எனது தொகுதிக்கு நல்ல பணிகளை எம்பி மூலம் செய்ய முடியும்.

பொதுவேட்பாளர் இலக்கியவாதியாகவோ, விளையாட்டுத்துறையைச் சேர்ந்தவராகவோ, வேறுமாநிலத்தவராகவோ இருப்பதில் பிரச்சினையில்லை. இதர ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் முடிவு பற்றி என்னால் ஏதும் கூற இயலாது" என்று குறிப்பிட்டார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x