

செஞ்சியில் பொதுமக்கள் வருகையைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் ஒத்துழைப்பு தருவதில்லை என, வணிகர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து, முகக்கவசம் அணிந்து வெளியே வரவேண்டும் என மத்திய, மாநில அரசுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
இதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காத கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
அந்தவகையில், செஞ்சியில் நேற்று (ஜூலை 1) திண்டிவனம் சார் ஆட்சியர் அனு ஆய்வு செய்து, மக்கள் கூட்டம் அதிகம் இருந்த 7 கடைகளுக்கு மூன்று நாட்களுக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். மேலும், சார் ஆட்சியர் முகக்கவசம் இன்றி எதிரே வந்த நபர்களிடம் எச்சரிக்கை செய்து, ரூ.100 அபதாரம் விதித்து தன்னிடம் இருந்த முகக்கவசத்தை வழங்கி கரோனா தொற்று குறித்து விளக்கியும், எச்சரித்தும் அனுப்பினார்.
இதையடுத்து, வர்த்தகர் சங்கம் மற்றும் வணிகர் சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் கடைகளுக்கு சீல் வைத்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர் கடையடைப்பு நடத்த வியாபாரிகள் முடிவு செய்தனர்.
இதையடுத்து தாசில்தார் கோவிந்தராஜ் முன்னிலையில் நடைபெற்ற சமாதானக்கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது. பின்னர் செஞ்சி காவல் ஆய்வாளர் கலைச்செல்வி வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சார் ஆட்சியரிடம் பேசி சீல் வைக்கப்பட்ட கடைகளின் சாவியை இன்று (ஜூலை 2) பெற்றுத் தருவதாக உறுதியளித்தார். இதையடுத்து, வியாபாரிகள் வழக்கம் போல் கடையைத் திறப்பது என முடிவு செய்தனர்.
இதுகுறித்து செஞ்சி வர்த்தகர் சங்கத்தலைவர் செல்வராஜிடம் கேட்டபோது, "பொதுமக்கள் தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பதில்லை. பொதுமக்கள் வருகையைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் போதுமான ஒத்துழைப்பு தருவதில்லை. எங்களிடம் உள்ள ஆட்களைக் கொண்டு பொதுமக்களை கட்டுப்படுத்த முடியவில்லை.
மேலும், உணவகங்களில் உள்ள காய்கறிகள், உணவுப்பொருட்கள் வீணாகிவிடும் என்பதால் கடையடைப்பு என்ற முடிவு எடுக்க வேண்டியதாயிற்று. காவல்துறையினர் இன்று சீல் வைக்கப்பட்ட கடைகளுக்கான சாவிகளை வாங்கித்தருவதாக உறுதியளித்துள்ளனர்" என்றார்.