

அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு மாவட்டம், ஒன்றியம் நகரம் முதல் ஊராட்சி வரையில் நிர்வாகிகள் நியமனத்துக்கு நிர்வாகிகளுடன் ஆலோசித்து பட்டியல் தயாரிக்க மாவட்ட செயலாளர்களுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் பழனிசாமி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைக்கு வரும் 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அடிப்படை பணிகளை தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் செய்து வந்த நிலையில், கரோனா நோய்த்தொற்று தடுப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பித்துள்ளதால் பணிகள் சுணக்கமடைந்துள்ளன. இருப்பினும், கட்சியில் நிர்வாக ரீதியிலான சில பணிகளை அவ்வப்போது அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
ஆளுங்கட்சியான அதிமுகவை பொறுத்தவரை, கரோனா காலத்திலும் கடந்த மே மாதம் அனைத்து ஊராட்சி செயலாளர்கள் பொறுப்புகளை ரத்து செய்ததுடன், தகவல் தொழில்நுட்ப பிரிவையும் முழுவதுமாக கலைத்து நிர்வாகிகளையும் பொறுப்பில் இருந்து விடுவித்தது.
4 மண்டலங்கள்
அதன்பின், அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவை நிர்வாக ரீதியிலான மாவட்டங்கள் அடிப்படையில் 4 மண்டலங்களாக பிரித்து, சென்னை மண்டல செயலாளராக அஸ்பயர் கே. சுவாமிநாதனும், வேலூர் மண்டல செயலாளராக எம். கோவை சத்யனும், கோவை மண்டல செயலாளராக சிங்கை ஜி.ராமச்சந்திரனும், மதுரை மண்டல செயலாளராக வி.வி.ஆர்.ராஜ் சத்யனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தலா ஒருவரை நியமிக்க முடிவு
இந்நிலையில் அடுத்த கட்டமாக, தேர்தலுக்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ளும் வகையில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு மாவட்டம், ஒன்றியம், நகரம், பேரூராட்சி மற்றும் பகுதி அளவில் நிர்வாகிகளும், மாநகராட்சி வட்டம், நகர வார்டுகள், ஊராட்சிகளுக்கு தலா ஒருவரையும் நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை நேற்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:
தகவல் தொழில்நுட்பம் இன்றைய காலகட்டத்தில் மிகவும் இன்றியமையாத ஒன்றாக அமைந்துள்ளது. தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் பகுதி அளவில் நிர்வாகிகளும் மாநகராட்சி வட்டம், நகர வார்டுகள் மற்றும் ஊராட்சிகளுக்கு தலா ஒருவர் வீதமும் நியமிப்பதற்கான பணிகள் நடைபெற உள்ளன.
பட்டியலை தயாரிக்க உத்தரவு
எனவே மாவட்ட செயலாளர்கள், தங்கள் மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், நாடாளுமன்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவின் மண்டல செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகளையும் கலந்து ஆலோசித்து தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு நிர்வாகிகள் பட்டியலை தயாரித்து தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.