

மணப்பாறையை அடுத்த ஆண்டவர் கோவிலை சேர்ந்தவர் பவானி(35). வையம் பட்டி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றிய இவர், கணவரை பிரிந்து 9 வயது மகளுடன் வாழ்ந்து வந்தார். கடந்த ஜூன் 28-ம் தேதி பவானி, எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். திருச்சி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.
இவர், தற்கொலை செய்துகொள்வதற்கு முன் தனது வாக்குமூலத்தை செல்போனில் வீடியோவாக பதிவு செய்திருந்தது தெரியவந்தது. அதில் பவானி கூறியுள்ளதாவது:
என்னிடம் பணம் வாங்கிய தமிழ்நாடு சிறப்புக் காவல்படை முதலணியில் பணிபுரியும் உமா ரூ.4 லட்சமும், டெல்லி பட்டாலியனில் பணிபுரியும் அருள் முருகானந்தம் ரூ.4 லட்சமும் தர வேண்டும். பலமுறை கேட்டும் கொடுக்கவில்லை. யாரிடம் வேண்டுமானாலும் சொல்லிக்கொள் என்கின்றனர்.
இதுவே எனக்கு பெரிய மன உளைச்சலாக உள்ளது. மேலும், 2 நாட்களாக காய்ச்சல், தலை வலி உள்ளதால் கரோனா வந்திருக்குமோ என பயமாக இருக்கிறது. அதனால் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துவிட்டேன் என கூறியுள்ளார். தொடர்ந்து, குளிர்பானத்தில் எலி மருந்தை கலந்து குடிப்பதையும் வீடியோவாக பதிவு செய்துள்ளார். வையம்பட்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.