Published : 05 Sep 2015 11:38 AM
Last Updated : 05 Sep 2015 11:38 AM

குளத்தில் களிமண் எடுப்பதற்கு கெடுபிடி தளர்த்த கைவினைக் கலைஞர்கள் வலியுறுத்தல்

குளத்தில் களிமண் எடுப்பதற்கு விதிக்கப்படும் கெடுபிடியை தளர்த்தவும், விலையையும் குறைத்துத் தர வேண்டும் என்று சிற்பங்களைச் செய்யும் கைவினைக் கலைஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி விழா வடமாநிலங்களில் மட்டுமல்லாது, தமிழகத்திலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்காக களிமண், காகிதக்கூழ்களில் விநாயகர் சிலைகள் ஆயிரக்கணக்கில் தயாரிக்கப்படுகின்றன. இவை 3 அடி முதல் 30 அடி வரையிலும் பிரம்மாண்டமாக செய்யப்படுகின்றன.

விநாயகர் சிலைகள் முழுக்க, முழுக்க களிமண்ணால் மட்டும் செய்யப்பட்டு, வர்ணம் தீட்டப்படுகிறது.

தமிழகமெங்கும் இச்சிலைகளை செய்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அதில் கோவையில் சுண்டக்காமுத்தூர் சாலையில் சேத்துமாவாய்க்கால் அருகே உள்ள ஜி.சந்திரனும் ஒருவர்.

அவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

கோவையில் செல்வபுரம், பைபாஸ் சாலை, சொக்கம்புதூர் என நான்கைந்து இடங்களில்தான் விநாயகர் சதுர்த்திக்கான சிலைகள் செய்யப்படுகின்றன. அவையெல்லாமே 5 அடிக்கு மேல் அளவுள்ள பெரிய விநாயகர் சிலைகள். 6 அங்குலம் முதற்கொண்டு வரும் குட்டி சிற்பங்களை இங்கு மட்டுமே செய்கிறோம். குடும்பத்துடன் பரம்பரை பரம்பரையாக இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். எனக்கு மட்டும் இதில் 40 ஆண்டுகால அனுபவம் உண்டு. அந்த காலத்தில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கும் வேன்கள் மூலம் நூற்றுக்கணக்கான சிலைகளை அனுப்பி வந்தோம். இப்போதெல்லாம் ஆயிரக்கணக்கில் சிலைகள் விநாயகர் சதுர்த்திக்கு மட்டும் செல்கின்றன.

இதற்காக 6 மாதங்களுக்கு முன்பே குளத்தில் களிமண் எடுத்து வந்து சிலை வேலைகளில் ஈடுபட வேண்டியிருக்கிறது. இதுவரை இத்தனை சிலைகள், என்று கணக்கிட்டு வேலையை தொடங்கியதில்லை. எவ்வளவு முடியுதோ, அவ்வளவு செய்வது வழக்கமாக உள்ளது.

களிமண் எடுப்பதற்கு முன்பெல்லாம் எந்தத் தடையும் இல்லை. இப்போதெல்லாம் குளத்தில் களிமண் எடுக்க ரூ.1 லட்சம் வரை அரசுக்கு டெபாசிட் செலுத்த வேண்டியிருக்கிறது. இதற்காக தரமான களிமண்ணை தேடித்தேடி குளத்தில் எடுக்க வேண்டி உள்ளது. 1 யூனிட் களிமண்ணுக்கு ரூ.30 ஆயிரம் ஆகிறது.

6 அங்குல சிலை முதல் 3 அடி 5 அடி சிலை வரை நாங்கள் இங்கே செய்கிறோம். இதற்கு ரூ.20 முதல் ரூ.1500 வரை விலை நிர்ணயிக்கிறோம். அப்படியும் இதற்கான செலவுக்கும் வரவுக்கும் கட்டுப்படியாவதில்லை. குடும்பமே இந்த தொழிலில் ஈடுபடுவதால் இதை சமாளிக்க முடிகிறது. வெளி ஆட்களை வரவழைத்து அட்வான்ஸ் கொடுத்து, கூலியும் கொடுத்தால் தொழிலே செய்ய முடியாது.

முன்பு சிலைகளை வர்ணம் தீட்ட பெயிண்ட் வகைகளுக்கு வரிக்கழிவு தந்தார்கள். இப்போது அதுவும் இல்லை. வரி கூடுதலாகி உள்ளது. எங்களுக்கான கைவினைஞர்கள் சங்கம் மூலமாக பெயிண்ட் வரி ரத்து செய்யவும், களிமண்ணை முன்பு போல குளங்களில் எடுக்கவும் அனுமதிக்குமாறு வலியுறுத்தியுள்ளோம். இதை ஒரு தொழிலாக, வியாபாரமாக மட்டும் பார்க்காமல், ஒரு கலையாகவும் பார்த்து அரசு ஏதாவது வழிவகை செய்தால்தான் இந்த தொழில் காப்பாற்றப்படும். விநாயகர் சதுர்த்தி முடிந்த கையோடு, கூடவே கொலு பொம்மைகளும் செய்கிறோம். குறிப்பிட்ட வகைகளை சென்னையில் இருந்து தருவித்தும் தருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x