Last Updated : 01 Jul, 2020 09:40 PM

 

Published : 01 Jul 2020 09:40 PM
Last Updated : 01 Jul 2020 09:40 PM

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்; போலீஸார் மீது கொலை வழக்குப் பதிவு: எஸ்.ஐ ரகுகணேஷ் கைது- சிபிசிஐடி அதிரடி

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தில் போலீஸார் மீது சிபிசிஐடி கொலை வழக்குப் பதிவு செய்துள்ளது. சாத்தான்குளம் எஸ்.ஐ.ஆக இருந்த ரகுகணேஷ் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸார் கொடூரமாகத் தாக்கியதில் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால், அந்த விசாரணை தொடங்கும் வரை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று உத்தரவிட்டது.

மேலும் இந்தச் சம்பவத்தில் போலீஸார் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் இருக்கிறது எனத் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து சிபிசிஐடி போலீஸ் துணை கண்காணிப்பாளர் அனில்குமார், நேற்று மாலையே திருநெல்வேலி சரக டிஐஜி பிரவீன் குமார் அபிநபுவைச் சந்தித்து, வழக்குத் தொடர்பான ஆவணங்களைப் பெற்று விசாரணையைத் தொடங்கினார். இந்நிலையில் சிபிசிஐடி போலீஸார் 12 குழுக்களாப் பிரிந்து வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தினர்.

டிஎஸ்பிக்கள் அனில்குமார், முரளிதரன், ஆய்வாளர்கள் பிறைச்சந்திரன், உலகராணி, சரவணக்குமார் ஆகியோர் தலைமையில் 5 குழுவினர் சாத்தான்குளத்தில் முகாமிட்டு காவல் நிலையம், மருத்துவமனை, ஜெயராஜின் கடை இருந்த பகுதி, அவர்களது வீடு உள்ளிட்ட இடங்களில் விசாரணை நடத்தினர்.

மேலும், இந்த வழக்குத் தொடர்பான பல்வேறு தடயங்களைச் சேகரித்தனர். இதேபோல் சிறப்பு உதவி ஆய்வாளர் சேவியர் தலைமையில் ஒரு குழுவினர் கோவில்பட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்துக்குச் சென்று இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸ் சார்பில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை நகல்களைச் சமர்ப்பித்தனர்.

ரகுகணேஷ் (வலது) பாலகிருஷ்ணன் (இடது)

சிபிசிஐடி ஐஜி சங்கர் மற்றும் எஸ்.பி. விஜயகுமார் ஆகியோர் இன்று மாலை சாத்தான்குளத்துக்கு வந்து நேரில் விசாரணை நடத்தினர். சாத்தான்குளம் காவல் நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று அவர்கள் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், சாத்தான்குளம் வழக்கில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், இரண்டு பிரிவுகள் திருத்தம் செய்யப்பட்டு சட்டப்பிரிவு 302 கொலை முயற்சி வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

வழக்கில் பிரதான குற்றம் சாட்டப்பட்டவராக எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது செய்யப்பட்டார். அவர் விரைவில் ரிமாண்ட் செய்யப்படுவார். மொத்தம் 6 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்றொரு எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் உள்பட எஞ்சியுள்ளவர்களைத் தேடி கைது செய்யக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x