Published : 01 Jul 2020 09:01 PM
Last Updated : 01 Jul 2020 09:01 PM

சென்னையைப் போல் மதுரையில் கரோனாவுக்கு சிறப்பு சித்த மருத்துவ மையம் அமையுமா?

சென்னையில் உள்ளது போல் மதுரையில் ‘கரோனா’ சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையம் தொடங்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மதுரையில் ‘கரோனா’ நோயாளிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். நேற்று வரை பிசிஆர் பரிசோதனை மூலம் 2,557 பேருக்கு ‘கரோனா’ உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து இதேவேகத்தில் ‘கரோனா’ தொற்று பரவும் என்று மருத்துவ வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ‘கரோனா’ நோயாளிகளுக்கு அலோபதி மருத்துவம் சிறப்பாக கைகொடுத்து வந்தாலும் இந்த தொற்று நோயில் இருந்து பாதுகாக்க ஆயுஷ் மருத்துவத்துறை பரிந்துரைக்கும் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, மற்றும் ஹோமியோபதி மருந்துகளை தற்போது மக்கள் வாங்கி சாப்பிட ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதனால், முன்பை விட தனியார் மற்றும் சித்த மருத்துவமனைகள், கடைகளில் தற்போது ஆயுஷ் மருந்துகளுக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

காய்ச்சல், இருமல், சளி, தொண்டை கரகரப்பு போன்ற ‘கரோனா’ அறிகுறி தொந்தரவுகளை இந்த ஆயுஷ் மருந்துகள் தீர்ப்பதால் மக்கள், ‘கரோனா’ வருவதை தடுக்கவும், வந்தால் அதை எதிர்கொள்ளவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

அந்த மருந்துகளை அதிகளவில் வாங்கி சாப்பிடுகின்றனர்.

தற்போது ஆயுஷ் மருந்துகளை ‘கரோனா’ நோயாளிகளுக்கு வழங்க தமிழக அரசும் அனுமதி வழங்கியுள்ளதால் மதுரை மாவட்டத்தில் தற்போது மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி, ஒத்தக்கடை வேளாண்மை பல்கலைக்கழக கல்லூரி மற்றும் ரயில்வே மருத்துவமனைக ‘கரோனா’ சிகிச்சை மையத்தில் ஆயுஷ் மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டு அவர்களும் அலோபதி மருத்துவர்களுடன் சேர்ந்து நோயாளிகளுக்கு கூட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கின்றனர்.

இது நோயாளிகளுக்கு நல்ல பலனை தருவதாகவும், அவர்கள் விரைவாக குணமடைவதற்கு இந்த ஆயுஷ் மருத்துவமும் ஒரு காரணம் எனக்கூறப்படுகிறது.

சென்னையில் 4 இடங்களில் தனியாகவே ‘கரோனா’ நோயாளிகளுக்கு ஆயுஷ் மருத்துவ சிகிச்சை மட்டும் வழங்கும் ‘கரோனா’ சித்த சிறப்பு மருத்துவ மையம் தொடங்கப்பட்டுள்ளது.

தற்போது அதுபோல், மதுரையிலும் ‘கரோனா’ நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு சித்த மருத்துவ மையம் தொடங்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்கின்றனர்.

இதுகுறித்து ஆயுஷ் மருத்துவர்கள் கூறியதாவது:

சென்னையில் உள்ள ‘கரோனா’ சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு முழுமையாக சித்த மருத்துவம் மூலம் மட்டுமே சிகிச்சை செய்யும் வழிமுறைகள் பின்பற்றபடுகிறது.

முன்பு கபசுர குடிநீர் மருந்து, நீல வேம்பு கசாயம், ஆடாதொடை மனபாக்கு, ஆர்சனிக் ஆல்பம் மற்றும் மூலிகை மருந்துகள் போன்றவை தற்போது பெரியளவில் மக்களிடம் சென்றடையவில்லை.

ஆனால், ‘கரோனா’ வந்தப்பிறகு இந்த மருந்துகளுக்கு மதிப்பு கூடியுள்ளது. சில சமயங்களில் இந்த மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்படும் அளவிற்கு இதன் தேவை மக்களிடம் அதிகரித்துள்ளது.

அதனால், ஆயுஷ் மருத்துவத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க சென்னையை போல் தனியாகவே ‘கரோனா’ சித்த சிறப்பு சிகிச்சை மையம் அமைக்க வேண்டும், ’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x