Last Updated : 01 Jul, 2020 08:28 PM

 

Published : 01 Jul 2020 08:28 PM
Last Updated : 01 Jul 2020 08:28 PM

குற்ற நடவடிக்கைகளைத் தடுக்க எனது செல்போன் எண்ணுக்குத் தகவல் கொடுங்கள்: திருச்சி மக்களுக்கு புதிய காவல் ஆணையர் வேண்டுகோள்

திருச்சி

திருச்சி மாநகரில் குற்ற நடவடிக்கைகளைத் தடுக்க தனது செல்போன் எண்ணுக்கோ அல்லது அலுவலக வாட்ஸ் அப் எண்ணுக்கோ தகவல் அளிக்குமாறு புதிய காவல் ஆணையர் ஜே.லோகநாதன் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாநகர காவல் ஆணையராக இருந்த வி.வரதராஜூ நேற்று ஓய்வு பெற்றார். அவருக்குப் பதிலாக தஞ்சை சரக டிஐஜியாக இருந்த ஜே.லோகநாதன் பதவி உயர்வு மூலம் திருச்சி மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து ஜே.லோகநாதன் இன்று திருச்சி - புதுக்கோட்டை சாலையிலுள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதன்பின் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

''திருச்சி மாநகரில் சட்டம், ஒழுங்கைச் சிறந்த முறையில் பராமரிப்பதற்கும், குற்ற நடவடிக்கையைத் தடுப்பதற்கும், கரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் தடுப்பதற்கும், போக்குவரத்தை நெரிசல் ஏற்படாமல் பராமரிப்பதற்கும், சாலை விபத்துகளைத் தடுப்பதற்கும் முன்னுரிமை கொடுக்கப்படும்.

தற்போது கரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதல் காரணமாக பொதுமக்கள் தங்களது புகார்களை இணைய வழியிலும் அனுப்பி, குறைகளுக்குத் தீர்வு காணலாம். சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர்கள் நடவடிக்கை எடுக்கத் தவறும்பட்சத்தில் அதுகுறித்து 96262-73399 என்ற எண்ணில் வாட்ஸ்-அப் மூலமாக புகார்களைத் தெரிவித்தால், அதுகுறித்து சட்டம், ஒழுங்கு துணை ஆணையர் மூலம் துரித நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு புகார் கொடுப்பவர்களுக்கு, அவர்களது செல்போனுக்கு ஒப்புகை குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும். புகார்களின் தன்மைக்கு ஏற்ப காணொலி மூலம் புகார்களைத் தெரிவிப்பதற்கும் புகார்தாரர்களுக்கு ஐ.டி. (உள்ளீடு) தெரிவிக்கப்படும். அலுவலக வேலை நாட்களில் காலை 11 மணி முதல் 12 மணி வரை காணொலி வாயிலாக புகார்களைத் தெரிவிக்கலாம்.

கரோனா வைரஸ் தொற்றுநோய் தடுப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் போலீஸாருக்கு, பொதுமக்களுடன் நல்லுணர்வு வலுக்கும் வகையில் தகுந்த முறையில் நடந்து கொள்ளுமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. எனவே திருச்சி மாநகர காவல் துறையினருடன் இணைந்து கரோனா வைரஸ் தொற்று நோயை ஒழிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.

இதுதவிர, மாநகரில் குற்ற நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் ஏற்கெனவே குறிப்பிட்ட வாட்ஸ்-அப் எண்ணிற்கோ அல்லது எனது செல்போன் எண்ணுக்கோ (98844-47581) பொதுமக்கள் நேரடியாகத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து உதவலாம்''.

இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x