பள்ளிக்கரணையில் 25 ஏக்கர் சதுப்பு நிலத்தை 682 பேர் ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றத்தில் வனத்துறை தகவல்

பள்ளிக்கரணையில் 25 ஏக்கர் சதுப்பு நிலத்தை 682 பேர் ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றத்தில் வனத்துறை தகவல்
Updated on
1 min read

பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் 25 ஏக்கரை 682 பேர் ஆக்கிரமித்திருப்பதாக உயர் நீதிமன்றத்தில் வனத்துறை தெரிவித்துள்ளது.

வனத்துறை தாக்கல் செய்த அறிக்கையில் திருப்தியில்லை என்று தெரிவித்த நீதிபதி என்.கிருபாகரன், பள்ளிக்கரணை சதுப்பு நில பரப்பளவின் வரைபடம் மற்றும் கூகுள் வரைபடத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

சென்னையை அடுத்துள்ள பள்ளிக்கரணை காயிதே மில்லத் நகரைச் சேர்ந்த 62 பேர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘நாங்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் வசிக்கிறோம். இந்தப் பகுதியையும் சேர்த்து வனத்துறைக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஒப்படைத்துள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை நீதிபதி என்.கிருபாகரன் விசாரித்து, “பள்ளிக் கரணை சதுப்பு நிலப் பகுதியில் ஏராளமான நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. எனவே, சதுப்பு நிலத்தின் மொத்த பரப்பளவு எவ்வளவு, ஆக்கிரமிப்பு எவ்வளவு, ஆக்கிரமிப்பாளர்கள் மீது எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு வனத்துறை பதில் அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

இந்நிலையில், இவ்வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வனத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், “பள்ளிக்கரணையில் 2,380 ஏக்கர் சதுப்பு நிலம் இருக்கிறது. இதில், சுமார் 25 ஏக்கரை 682 பேர் ஆக்கிரமித்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப் பாளர்கள் தொடர்ந்துள்ள வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. சதுப்பு நிலத்தைப் பாதுகாக்க 1,500 மீட்டர் நீளத்தில் சுவர் கட்டப்பட்டுள்ளது. வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் குப்பைகள் எரிக்கப்படுவதில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதையடுத்து நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு:

வனத்துறை தாக்கல் செய்த அறிக்கையில் நீதிமன்றம் கோரிய முழு விவரங்களும் இல்லை. நீதிமன்றம் கேட்டுள்ள அனைத்து வினாக்களுக்கும் பதில் அளிக்க வேண்டும். அத்துடன் பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பரப்பளவின் வரைபடம், கூகுள் வரைபடம் ஆகியவற்றையும் தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் 22-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in