Published : 01 Jul 2020 19:47 pm

Updated : 01 Jul 2020 19:55 pm

 

Published : 01 Jul 2020 07:47 PM
Last Updated : 01 Jul 2020 07:55 PM

'இயேசு கிறிஸ்துவுக்கு தண்டனை வழங்கிய பொந்தியு பிலாத்து போல் செயல்பட முடியாது': சாத்தான்குளம் வழக்கில் பைபிளை மேற்கோள் காட்டிய நீதிபதிகள்

sathankulam-case-judges-quoted-biblical-verse

மதுரை

கோவில்பட்டி கிளைச் சிறையில் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் சிபிஐடிக்கு மாற்றிய உயர் நீதிமன்ற நீதிபதிகள், ‘பெருவாரியான மக்களின் கூச்சலுக்கு கீழ்படிந்து இயேசு கிறிஸ்துவுக்கு தண்டனை வழங்கிய பொந்தியு பிலாத்து போல் செயல்பட முடியாது’ என பைபிளை மேற்கோள்காட்டினர்.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்த சம்பவத்தை உயர் நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வு நேற்று உத்தரவிட்டது.

அந்த உத்தரவில் நீதிபதிகள் மேலும் கூறியிருப்பதாவது:

இப்பொழுது நாங்கள் செயல்படாவிட்டால்.. அது மிகுந்த காலதாமதமாகிவிடும். இந்த உத்தரவை பிறப்பிக்க ஏன் இவ்வளவு கால அவகாசத்தை நீதிமன்றம் எடுத்துக்கொண்டது என்று சிலர் நினைக்கலாம். பெருவாரியான மக்களின் கூக்குரலைக் கேட்டு அதன் அடிப்படையில் நீதிமன்றம் ஒரு உத்தரவைப் பிறப்பிக்கமுடியாது. மக்களின் மனதிலிருந்து ஒரு விசயம் எளிதில் மறைந்துவிடும். ஆனால் நீதிமன்ற ஆவணங்கள் எளிதில் மறைந்துவிடாது. அது நிலைத்து நிற்கும்.

பைபிளில் பொந்தியு பிலாத்து என்ற தேசாதிபதி (Roman Governor) பெருவாரியான மக்களின் கூச்சலுக்குக் கீழ்ப்படிந்து இயேசு கிறிஸ்துவை சிலுவையில் கொலை செய்ய ஒப்புக்கொடுத்துவிட்டு அந்த பாவத்தில் தனக்கு பங்கில்லை என்று தன் கைகளைக் கழுவிக் கொண்டாக கூறப்பட்டுள்ளது.

இந்த நீதிமன்றமும் பொந்தியு பிலாத்து போல் இருக்க முடியாது. போதிய ஆதாரங்கள்/ஆவணங்கள் எதுவும் இல்லாமல் மக்கள் அனைவரும் சொல்கிறார்கள் என்பதற்காக இந்த நீதிமன்றம் எவ்வித உத்தரவையும் அவசரப்பட்டு பிறப்பித்துவிடமுடியாது.

இப்பொழுதோ இந்த உத்தரவுகளைப் பிறப்பிக்க போதிய முகாந்திரம் கிடைத்துவிட்டது. இறந்தவர்கள் உடலில் காணப்பட்ட காயங்கள் உறுதிப்படுத்தப்பட்ட பிரேதபரிசோதனை அறிக்கை, நீதித்துறை நடுவரின் அறிக்கை, தலைமைக் காவலர் திருமதி ரேவதியின் வாக்குமூலம் ஆகியவற்றை பார்க்கையில் இருவரையும் தாக்கிய காவலர்கள் மீது இ.பி.கோ பிரிவு 302 ன் கீழ் கொலை வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இருப்பது தெரிகிறது.

எனவே மிகுந்த பரிசீலனைக்குப் பிறகு இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பி அனில் குமாரை விசாரணை அதிகாரியாக நியமிக்கிறோம். அவரது கடந்த கால செயல்பாடுகளை நன்கு அலசி ஆராய்ந்த பின்னரே அவரை நியமிக்கிறோம்.

இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்படும் அனில்குமார், இறந்த இரண்டு பேர்களின் குடும்பத்தினர்களின் கண்களிலிருந்து புரண்டோடி வரும் கண்ணீர் ஆறாக பெருக்கோடிக் கொண்டிருக்கிறது என்பதை மனதில் நிறுத்தி விசாரித்து, அவர்கள் கண்ணீரைத் துடைக்கும் வகையில் நடந்து கொள்வார் என இந்த நீதிமன்றம் உறுதியாக நம்புகிறது.

அதுமட்டுமல்ல இந்த நீதிமன்றம் இந்த வழக்கை மிக உன்னிப்பாகக் கவனித்து வருகிறது என்பதனையும் அவர் நினைவில் கொள்ள வேண்டும்.

உயர் நீதிமன்ற உத்தரவுபடி சாத்தான்குளம் காவல்நிலையத்தை வருவாய்துறை அலுவலர்களின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரை இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

இயேசு கிறிஸ்துவுக்கு தண்டனைபொந்தி பிலாத்துசாத்தான்குளம் வழக்குஜெயராஜ்பென்னிக்ஸ்பைபிளை மேற்கோள் காட்டிய நீதிபதிகள்பொந்தியு பிலாத்து

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author