

அமைச்சர் காமராஜ் சாத்தான்குளம் சம்பவம் குறித்து மனசாட்சியை அடகு வைத்துவிட்டு, அற்ப ஊழல் செய்வதற்காகப் பேட்டி கொடுக்க வேண்டாம் என, திமுக எம்எல்ஏ எ.வ.வேலு விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏவுமான எ.வ.வேலு இன்று (ஜூலை 1) வெளியிட்ட அறிக்கை:
"உயர் நீதிமன்றமே கொலை வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் இருக்கிறது என்று உத்தரவிட்ட பிறகு சாத்தான்குளம் விவகாரத்தில் தவறான தகவல்களைப் பரப்பக் கூடாது என்று திமுக தலைவரைப் பார்த்து உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியிருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீதிபதியை மிரட்டியது போல் உயர் நீதிமன்றத்தையே எச்சரிக்கும் வகையில் இந்தக் கருத்தைக் கூறியிருக்கிறாரா என்று அமைச்சர் தெளிவுபடுத்திட வேண்டும். அப்பாவிகள் ஜெயராஜையும், பென்னிக்ஸையும் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று, பிணமாகத் திருப்பிக் கொடுத்துவிட்டு இன்னும் அந்த இரட்டைக் கொலைக்கு அமைச்சர் பதவியில் இருப்பவர் வக்காலத்து வாங்கி பேட்டி கொடுப்பது தகுதியற்ற செயல். உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள வழக்கு விசாரணையைத் திசைதிருப்பத் தூண்டும் செயல்.
'இதுகுறித்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக முதல்வர் பழனிசாமி என்னிடம் தெரிவித்தார்' என்று அமைச்சர் காமராஜ் கூறியிருக்கிறார். எனக்கு ஒரு சந்தேகம் இப்போது வருகிறது. தமிழகத்தின் முதல்வர் பழனிசாமியா அல்லது அமைச்சர் காமராஜா என்பதுதான் அந்த சந்தேகம்!
ஒருவேளை நேற்று திமுக தலைவர் கூறியபடி சத்தம் போடாமல் காவல் துறையை அமைச்சர் காமராஜிடம் முதல்வர் ஒப்படைத்துவிட்டாரா?
உயர் நீதிமன்றம், 'இறந்த இருவரின் குடும்பத்தினரின் கண்களில் இருந்து ஆறாக ஓடும் கண்ணீரைத் துடைக்கும் வகையில் சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் புலனாய்வு செய்ய வேண்டும்' என்றும், 'இந்த வழக்கு விசாரணையை உயர் நீதிமன்றமே நேரடியாகக் கண்காணிக்கும்' என்றும் உத்தரவிட்ட பிறகு, அதை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு மட்டுமே முதல்வருக்கு இருக்கிறது. 'சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என்று உயர் நீதிமன்றத்திற்கு முதல்வர் சொல்ல வேண்டுமே தவிர, தன் கீழ் உள்ள ஓர் அமைச்சருக்கு அல்ல!
அப்படியென்றால் இந்த அமைச்சரவையில் காமராஜ் இன்னொரு 'சூப்பர்' முதல்வரா?’
’இது ஒரு உணர்வுபூர்வமான விஷயம். எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட யாரும் தவறான தகவல்களைப் பரப்பக்கூடாது’ என்று திமுக தலைவரைப் பார்த்துக் கேட்கும் அமைச்சர் காமராஜ், ஜூன் 19-ம் தேதியிலிருந்து 12 நாட்களாக எங்கு போனார்? அவருடைய உணர்வு எங்கே போனது?
அது மட்டுமா? நீதிபதியையே காவல் நிலையத்தில் வைத்து மிரட்டி, இந்த இரட்டைக் கொலை தொடர்பான தடயங்களை மறைக்க முயன்ற கூடுதல் எஸ்.பி. குமார் மற்றும் டிஎஸ்பி பிரதாபன் ஆகியோருக்கு உடனடியாக பணி நியமனம் கொடுத்தது எந்த வகையிலான உணர்வு?
இரட்டைக் கொலையை மறைக்க முதல்வரின் உத்தரவில் செயல்பட்டதால்தானே நீதிமன்ற அவமதிப்பில் ஆஜரான ஈரம் கூட காய்வதற்கு முன் உயர் நீதிமன்றத்தில் ஆஜரான சில மணி நேரங்களிலேயே அவர்களுக்குப் பணி கொடுக்கப்பட்டுள்ளது?
அப்பாவிகள் காவல் நிலையத்தில் வைத்துக் கொல்லப்பட்டதை மறைத்திட இரவு பகல் தூங்காமல் திசைதிருப்பும் பணிகளில் ஈடுபடும் அதிமுக ஆட்சிக்கும் மக்களின் உணர்வுகளுக்கும் துளியும் சம்பந்தமில்லை!
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடத்தப்பட்டுள்ள இரட்டைக் கொலை மனித உரிமைகளை மீறியது. சட்டத்தின் ஆட்சியைப் படுகொலை செய்திருப்பது. உச்ச நீதிமன்றம் அளித்துள்ள கைது வழிகாட்டுதல்கள் அத்தனையையும் மீறிய அநாகரிகமான- கொலை பாதகச் செயல். அதில் உயிரிழந்திருப்பவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காகக் கடையைத் திறந்து வைத்திருந்தவர்கள்.
காவல் நிலைய விசாரணை என்று அழைத்துச் செல்லப்பட்டு அடித்துக் கொல்லப்பட்டவர்கள். தன் கணவரையும் மகனையும் ஒரே நேரத்தில் பறிகொடுத்த ஜெயராணியின் கண்ணீர்த் துளிகள் ஒவ்வொன்றும் இன்று ஒவ்வொரு இல்லத்துத் தாய்மார்களின் கண்களையும் குளமாக்கிக் கொண்டிருக்கின்றன என்பதை அமைச்சர் காமராஜ் புரிந்துகொள்ள வேண்டும்.
இது ஏதோ தான் வீடுகாலி செய்யும் வேலையோ அதற்கு 30 லட்சம் வாங்கி மோசடி செய்த வேலை போன்றதோ அல்ல என்பதை அமைச்சர் காமராஜ் தெரிந்துகொள்ள மனதில் ஈரமில்லாமல் இருக்கலாம். ஆனால், இரட்டைக் கொலையை ஏதோ 'தவறான தகவல்கள்' என்று மனசாட்சியை அடகு வைத்துவிட்டு, அற்ப ஊழல் செய்வதற்காகப் பேட்டி கொடுக்க வேண்டாம் என்று எச்சரிக்க விரும்புகிறேன்".
இவ்வாறு எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.