

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே காவிரி குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் ஒரு மாதமாக குடிநீர் கிடைக்காமல் 25 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தவிக்கின்றனர்.
காளையார்கோவில் அருகே மாரந்தை, இலந்தங்கரை, ஏரிவயல் ஊராட்சிகளுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இந்நிலையில் இலந்தங்கரை கண்மாய் குடிமராமத்து திட்ட பணியின்போது குழாயில் உடைப்பு ஏற்பட்டது.
ஒரு மாதமாகியும் உடைப்பை சரிசெய்யாததால் குடிநீர் விநியோகம் முற்றிலும் தடைப்பட்டது.
இதனால் மூன்று ஊராட்சிகளையும் சேர்ந்த சேத்தூர், கீழச்சேத்துார், தளிர்தலை, மாராந்தை, கோரவலசை, இலந்தங்கரை, கோடிக்கரை, சோலைமுடி, ஏரிவயல் உள்ளிட்ட 25 கிராமங்களில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் தவிக்கின்றனர். அவர்கள் அடிபம்பு, விவசாய பம்புசெட் மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து வருகின்றனர். சிலர் ஒரு குடம் ரூ.10-க்கு வாங்கி பயன்படுத்துகின்றனர்.
இதுகுறித்து மாரந்தை ஊராட்சித் தலைவர் திருவாசகம் கூறியதாவது: ஒரு மாதமாக குடிநீர் விநியோகம் இல்லை. குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் காவிரி திட்ட குழாய்களை முறையாக பராமரிப்பது இல்லை.
இதனால் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. ஏற்கனவே பலமுறை ஊராட்சி நிர்வாகம் செலவில் உடைப்பை சரிசெய்தோம்.
மேலும் காவலாளி இல்லாததால் இலந்தகரையில் உள்ள காவிரி குடிநீர் சம்ப்பில் சுகாதாரமின்றி கிராமமக்கள் இறங்கி தண்ணீர் எடுக்கின்றனர். இதனால் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. தொடர்ந்து புகார் தெரிவித்தும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை, என்று கூறினார்.