

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கன்னிப்பூ அறுவடை நடந்து வந்த நிலையில், மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் கலக்கத்தில் உள் ளனர்.
நெற் பயிருக்கு கட்டுபடியான விலையின்மை, அரசு கொள்முதல் செய்யாதது உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்கின்றனர். வேளாண்மைத் துறை புள்ளி விபரங்களின்படி நடப்பாண்டு கன்னிப்பூ பருவத்தில் 8,350 ஹெக்டேர் பரப்பில் நெல் பயிராகியுள்ளது. கடந்த ஒரு மாதமாக 50 சதவீத அறுவடை பணிகள் முடிவடைந்துள்ளன.
திடீரென ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் நாஞ்சில் நாட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் வயல்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. பொதி பருவத்தில் இருந்த பயிர்கள் சேதமாகி மகசூல் இழப்பு ஏற்படும் சூழல் நிலவுகிறது.
இழப்பீடு வேண்டும்
முன்னோடி விவசாயி செண்பக சேகரன் கூறும்போது, ‘உரக்கடை, கூட்டுறவு சங்கங்களில் கடன் வாங்கி விவசாயம் செய்து வருகிறோம். நடவு செய்த பருவத்தில் தண்ணீருக்கு தவம் இருந்தோம். இப்போது அறுவடை நேரத்தில் மழை பெய்து அதே தண்ணீரால் பாதிக்கப்பட்டு நிற்கி றோம்.
துவரங்காடு சுற்றுவட்டாரப் பகுதியில் அறுவடை பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வயல்கள் சகதிக் காடாய் மாறியுள்ளன. அறுவடை செய்த நெல் மணிகளை டிராக்டர் மூலம் கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் அறுவடை இயந்திரத்தில் வைத்தே வயலில் இருந்து சாலை வரை கொண்டு வர வேண்டியுள்ளது. அறுவடை இயந்திரத்தின் கூலியாக ஒரு மணி நேரத்துக்கு ரூ.2,000 கொடுக்கிறோம். மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார் அவர்.