

புதுக்கோட்டையில் காவலர்களுக்கு இன்று மனநலப் பயிற்சி அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட தந்தை, மகன் ஆகிய 2 பேர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுக்கப் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து, கோபத்தைக் கட்டுப்படுத்தி, பணியாற்றுவதற்காகக் காவல்துறையினருக்குப் பல்வேறு விதமான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் துறையினருக்கு இன்று (ஜூலை 1) மனநலப் பயிற்சி அளிக்கப்பட்டது.
இப்பயிற்சியை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பி.வி.அருண்சக்திகுமார் தொடங்கி வைத்தார். அப்போது, "படிப்படியாக அனைத்துக் காவல்துறையினருக்கும் மனநலப் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இப்பயிற்சியில் மாவட்ட மனநலத் திட்ட அலுவலர் ஆர்.கார்த்திக் தெய்வநாயகம் பேசுகையில், "பொதுமக்களை மென்மையாகக் கையாள வேண்டும். சிறு சிறு தவறுகளுக்கெல்லாம் உச்சபட்சமாக கோபமடையத் தேவையில்லை. எந்த ஒரு செயலுக்கும் கோபம் தீர்வளிக்காது.
குடும்ப உறுப்பினர்களிடம் நடந்துகொள்வதைப் போன்று பொதுமக்களிடம் காவல்துறையினர் நடந்துகொள்ள வேண்டும். பணி நேரத்தில் மன உளைச்சல் ஏற்பட்டால் மாவட்ட மனநல ஆலோசனை மையத்தைத் தொடர்புகொள்ளலாம்" என்றார்.
மேலும், மன உளைச்சலைக் கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு விதமான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.