

ஓசூர் பேருந்து நிலையத்தில் ஊரடங்குத் தளர்வு காலகட்டத்தில் இயங்கி வந்த 50 சதவீத அரசுப் பேருந்துகளும் இன்று முதல் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன. பேருந்துகள் மற்றும் பயணிகள் இன்றி வெறிச்சோடிய பேருந்து நிலையத்தில் வண்ணமடித்தல் உள்ளிட்ட பராமரிப்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி முதல் கட்டமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் இயக்கம் நிறுத்தப்பட்டு ஓசூர் பேருந்து நிலையம் மூடப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் ஓசூர் மாநகராட்சி சார்பில் காலியாக இருந்த பேருந்து நிலையத்தில் சேதமடைந்த கட்டிடப் பகுதிகளைச் செப்பனிட்டு, வண்ணமடித்து அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் கடந்த ஜூன் 1-ம் தேதி காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை 50 சதவீத அரசுப் பேருந்துகள் இயங்கும் என்ற அரசு உத்தரவு வெளியானதைத் தொடர்ந்து ஓசூர் பேருந்து நிலையத்தில் இருந்து கிருஷ்ணகிரி, வேலூர், தருமபுரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு 50 சதவீத அரசுப் பேருந்துகள் இயங்கி வந்தன.
இச்சூழலில் மாநில அளவில் கரோனா நோய்ப் பரவலைத் தடுக்கும் வகையில் ஜூலை 31 வரை 6-ம் கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு மாவட்டங்களுக்குள் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள அரசு, தனியார் பொதுப் பேருந்து போக்குவரத்து ஜூலை 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது என்று அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து, ஓசூர் பேருந்து நிலையத்தில் இதுநாள் வரை இயங்கி வந்த அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாகக் கடந்த ஒரு மாதகாலமாக ஓசூர் பேருந்து நிலையத்தில் இருந்து தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், பாகலூர், தளி, சூளகிரி, அஞ்செட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளுக்கு இயங்கி வந்த 33 பேருந்துகளும் மற்றும் ஓசூரிலிருந்து ஜுஜுவாடி வரை இயங்கிவந்த 10-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகளும் ஓசூரிலிருந்து கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை உட்பட 5 மாவட்டங்களுக்கிடையே இயங்கி வந்த 50-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகளும் ஜூலை 1-ம் தேதியான இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் பயணிகள் மற்றும் பேருந்துகள் இன்றி ஓசூர் பேருந்து நிலையம் வெறிச்சோடிக் காணப்பட்டது. இதனிடையே ஓசூர் மாநகராட்சி சார்பில் பேருந்து நிலையத்தில் நடைபெற்று வந்த பராமரிப்புப் பணிகள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.