Published : 01 Jul 2020 05:12 PM
Last Updated : 01 Jul 2020 05:12 PM

என்எல்சி அனல்மின் நிலைய தொடர் விபத்துகள்: நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வு நடத்துக; வைகோ

வைகோ: கோப்புப்படம்

சென்னை

என்எல்சி அனல்மின் நிலைய தொடர் விபத்துகள் குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வு நடத்த வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, வைகோ இன்று (ஜூலை 1) வெளியிட்ட அறிக்கை:

"நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது அனல்மின் நிலையத்தில், ஐந்தாவது அலகில் உள்ள கொதிகலன் வெடித்ததில், 6 தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. மேலும், 17 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவ சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.

கடந்த மே மாதம் 7 ஆம் தேதி அன்று இதே இரண்டாவது அனல்மின் நிலயத்தில் 6 ஆவது அலகில் உள்ள கொதிகலன் வெடித்ததில் 4 பேர் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு இதே போல கொதிகலன் வெடித்ததில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனம், நவரத்னா சிறப்பைப் பெற்று, இயங்கி வருகிறது. அனல்மின் நிலையங்களில் ஏற்படும் இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்க உடனடியாக தொழில்நுட்பக் குழு ஒன்றை அமைத்து ஆய்வு நடத்த மத்திய நிலக்கரித் துறை அமைச்சகம் உத்தரவிட வேண்டும்.

அனல்மின் நிலையங்களின் பராமரிப்புப் பணிகள் முறையாக நடைபெறவும், உரிய கண்காணிப்பு தேவை என்பதையும் இதுபோன்று தொடர்ந்து நடக்கின்ற விபத்துகள் உணர்த்துகின்றன.

மத்திய நிலக்கரித் துறை அமைச்சகத்தின் நாடாளுமன்ற நிலைக்குழு என்எல்சி இந்தியா நிறுவனத்தின் செயல்பாடுகளை ஆய்வுக்கு உட்படுத்தி, நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதுகுறித்து, மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கவனத்திற்கும் கொண்டு செல்ல இருக்கிறேன்.

உயிரிழந்த ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு என்எல்சி இந்தியா நிறுவனம் 25 லட்ச ரூபாய் கருணைத் தொகை வழங்குவதோடு, அவர்கள் குடும்பங்களில் ஒருவருக்கு என்எல்சியில் நிரந்தர வேலைவாய்ப்பையும் வழங்க வேண்டும்.

உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், தொழிலாளர் நலனுக்காக மதிமுக தொடர்ந்து பாடுபடும்"

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x