

சாத்தான்குளம் போன்ற சம்வபவங்களில் முதல்வரும் அமைச்சர்களும் யாரையும் பாதுகாக்கக்கூடிய வகையில் பேசுவது, அப்பதவியின் மாண்பை ஒருபோதும் காப்பாற்றுவது ஆகாது என, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, கி.வீரமணி இன்று (ஜூலை 1) வெளியிட்ட அறிக்கை:
"தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இரண்டு வணிகப் பிரமுகர்கள் ஜெயராஜ் (வயது 58), அவரது மகன் பென்னிக்ஸ் (வயது 31) ஆகியோரை காவல் நிலையத்தில் வைத்து கடுமையாகத் தாக்கி, மிருகத்தனமாக நடந்துகொண்டனர். சித்திரவதைக்குப் பின்னர் விசாரணைக் கைதிகளாக இருந்த நிலையில், அவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பட்டமான சித்திரவதையினால் ஏற்பட்ட அநியாயப் படுகொலை என்பது உலகறிய உண்மைகள் உலா வரத் தொடங்கிவிட்டன.
வரலாற்றில் அழிக்க முடியாத களங்கம்!
தமிழ்நாட்டுக் காவல்துறைக்கும், அத்துறையைத் தன் பொறுப்பில் வைத்திருக்கும் முதல்வருக்கும் ஏற்பட்டுள்ள களங்கம் வரலாற்றில் எளிதில் அழிக்கப்பட முடியாத ஒன்றாகும்.
உயர் நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதிகள் அமர்வு, நடுவர் விசாரணை செய்வதைத் தடுப்பதற்கு மாவட்ட காவல்துறை நிர்வாகம் தன்னிடம் உள்ள அனைத்து அதிகாரத்தையும் பயன்படுத்துகிறது என்று தாங்களாகவே முன்வந்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பது எதைக் காட்டுகிறது? அத்துறையில் பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள் குற்றம்புரிந்து, அதைச் சாமர்த்தியமாக மறைக்க அனைத்து முயற்சிகளையும் கையாண்டதோடு, விசாரணைக்கு வந்த மாஜிஸ்திரேட்டுக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. அதோடு, அவரைக் கொச்சையாகப் பேசி, கேட்ட தடயங்களைத் தரவும் மறுத்து, அதீதமாக நடந்துகொண்டது எந்த தைரியத்தில், யார் தைரியத்தில்? என்பதே நாட்டு மக்களின் கேள்வி!
காவல்துறையினரை மாற்றுவது தகுந்த நடவடிக்கையா?
காவல்துறையைத் தனது கையில் வைத்திருக்கும் முதல்வர், 'உடல்நலக் குறைவால் அவ்விருவரும் இறந்துவிட்டார்கள்' என்று கூறியது எவ்வகையில் நியாயம்? அதேபோல், அம்மாவட்ட அமைச்சர் ஒருவர், 'காவல் நிலையத்தில், லாக் அப் மரணமல்ல அவை' என்ற ஒரு விநோத வியாக்கியானம் தந்ததும் யாரைப் பாதுகாக்க? அங்கிருந்த காவல்துறை கருப்பு ஆடுகள் நடந்துகொண்டதும், காலந்தாழ்ந்த நடவடிக்கையாக, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இருந்த ஒட்டுமொத்த காவல்துறையினரை மாற்றியது மட்டுமே அதற்குப் போதிய சட்ட நடவடிக்கையாகுமா?
உயர் நீதிமன்ற மதுரை கிளை அமர்வு நீதிபதிகளின் உத்தரவுப்படி, நீதிக் கண்காணிப்பு எந்த அளவுக்குத் தேவைப்பட்டு இருக்கிறது என்றால், சாத்தான்குளம் காவல் நிலையம், வட்டாட்சியர், நேரடிக் கண்காணிப்பின்கீழ் கொண்டு வரப்பட்டு இயங்குகின்ற இதுவரை நாட்டிலேயே நாம் கேள்விப்பட்டிராத ஓர் அதிர்ச்சிக்குரிய புதிய முன்மாதிரி ஏற்பட்டுள்ளது, தமிழ்நாட்டு காவல்துறைக்கும், அதனை நிர்வகிக்கும் முதல்வருக்கும் ஏற்பட்ட கருப்புப் புள்ளியல்லவா!
உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்
கொலை வழக்குப் பதிவு செய்வதோடு நிறுத்திவிடாமல், குற்றவாளிகளான அக்காவல்துறை அதிகாரிகள் மீதும், தயவு தாட்சண்யம் காட்டாமல் உடனடியாக தமிழக அரசு மேல் நடவடிக்கை எடுக்கத் தாமதமின்றி முன்வர வேண்டும். அப்போதுதான் காவல்துறையின் மீதும், ஆட்சியின்மீதும் நம்பிக்கை ஏற்படும்.
சிபிஐ விசாரணை தொடங்கும் முன் தமிழ்நாடு அரசின் சிபிசிஐடி பிரிவு இதுபற்றி முழு விசாரணையைத் தொய்வின்றி நடத்திட வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளதால், அதன்படி கொலை வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துதல் அவசரம், அவசியம்!
எச்சரிக்கையுடன் ஆவணங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்
பொய்யான முதல் தகவல் அறிக்கை பதிவாகியிருக்கிறது என்கிற நடுவரின் அறிக்கையின் மீதும் சரியான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படல் வேண்டும். உரிய ஆவணங்கள் உயர் நீதிமன்ற மதுரை கிளை கண்காணிப்பின்கீழ் இயங்கும் காவல்துறையினரால் சரியான முறையில் பாதுகாக்கப்படவேண்டும். வழக்கமாக இதுபோன்ற பரபரப்பு வழக்குகளில் ஆவணங்கள் காணாமற்போவதும், 'திடீரென்று தீ விபத்து ஏற்படுவதும்' முன்னர் பலமுறை ஏற்பட்ட நிகழ்வுகள். எனவே, போதிய எச்சரிக்கையுடன் ஆவணங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
ஒத்துழைப்புத் தந்து உண்மையை அச்சத்தோடு கூறிய காவலர் ரேவதி, சாட்சிப் பதிவில் கையெழுத்திடத் தயங்கிய அவருக்குப் பாதுகாப்பு அளிப்பது உறுதி என்று தெரிந்த பிறகே, கையொப்பம் இட்டுள்ளார் என்பதால், அவருக்குப் போதிய பாதுகாப்புத் தரத் தவறக்கூடாது.
ஒரு நடுவரை, அதுவும் உயர் நீதிமன்றம் கண்காணிக்கும் வழக்கு என்று தெரிந்த நிலைக்குப் பிறகும், அங்குள்ள காவல்துறையினர் சிலர், ஒருமையில் பேசி கொச்சைப்படுத்தியது எவ்வகையில் ஏற்கத்தக்கது! காவல்துறையின் மீதுள்ள மதிப்பையும், மாண்பையும் இழக்கச் செய்யும் இழிசெயல் அல்லவா?
அரசு மீது நம்பிக்கை இழக்கும் நிலை ஏற்படலாமா?
காவல்துறையின் மரியாதை, நன்மதிப்பு நாட்டில் உள்ளபடியே காப்பாற்றப்பட வேண்டுமானால், இத்தகைய சிலரின் வரம்பு மீறிய சட்ட விரோத பேச்சுக்கு உரிய தண்டனை அளிக்கப் பெற்று, நீதி, நியாயம் பாதிக்கப்பட்டோருக்குக் கிடைக்கச் செய்வதுதான் சரியான வழிமுறையாகும்.
இதுவே இனி வருங்காலத்தில் காவல்துறையைச் சார்ந்த எவரும் இம்மாதிரி இழிசெயல்களை நினைக்கவோ, செய்யவோ கூடாத அளவுக்குச் சரியான பாடமாக அமையும். உரிய முறையில் கடமையாற்றி காவல்துறையின் மரியாதையைக் காப்பாற்றி, மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்!
முதல்வரும் மற்றும் அமைச்சர்களும் இதுபோன்ற வழக்குகளில் யாரையும் பாதுகாக்கக் கூடிய வகையில் பதிலளிப்பது, அப்பதவியின் மாண்பை ஒருபோதும் காப்பாற்றுவது ஆகாது. மக்களுக்கு அரசு மீது நம்பிக்கை இழக்கும் நிலை ஏற்படலாமா?"
இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.