Published : 01 Jul 2020 03:09 PM
Last Updated : 01 Jul 2020 03:09 PM

ஊட்டி குளிரில் அலைந்து திரியும் குதிரைகள்: கரோனா க‌ஷ்டத்தால் கைவிடப்பட்ட அவலம்

ஊட்டி தெருவில் சுற்றும் குதிரைகள்

“நடுங்கும் குளிரில் யார் வர்றாங்களோ இல்லையோ காலை 8 மணிக்குப் பழக்கதோஷத்துல இந்தக் குதிரைகள் ஆஜராகிடுதுங்க. ஆனா, இந்தக் குதிரைகளைக் கவனிக்கத்தான் ஆளில்லை” என்று வருந்துகிறார்கள் ஊட்டி நகரவாசிகள். உரிமையாளர்களால் கைவிடப்பட்ட குதிரைகள் தீவனம் கிடைக்காமல், ஊட்டியின் தெருக்களில் திரிவது விலங்கு நல ஆர்வலர்களை வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது.

ஊட்டி என்றாலே சட்டென்று நினைவுக்கு வருவது அங்குள்ள ரேஸ் மைதானமும், குதிரை ரேஸ்களும்தான். கோடை சீஸனான ஏப்ரல், மே மாதங்களில் நடக்கும் பந்தயங்களில் 500-க்கும் மேற்பட்ட குதிரைகள் கலந்துகொள்ளும். வெவ்வேறு ஊர்களிலிருந்து குதிரைகளைக் கொண்டுவந்து பந்தயத்தில் விடுபவர்கள், தங்கள் குதிரைகள் ஓட முடியாத நிலைக்குச் சென்றுவிட்டாலோ, வயதாகி விட்டாலோ அங்கேயே விட்டுவிட்டுப் போய் விடுவதுண்டு. சிலர் அவற்றைக் குறைந்த விலைக்கு வாங்கி சுற்றுலாப் பயணிகள் மிகுதியாக உள்ள ஊட்டி படகு இல்லம், ‘நைன்த் மைல்’ போன்ற இடங்களில் சவாரிக்குப் பயன்படுத்துவது காலங்காலமாக நடந்து வருகிறது.

பகலில் சவாரிக்குப் பயன்படுத்தப்படும் இந்தக் குதிரைகள் இரவு நேரங்களில் வீதிகளில் சுற்றித் திரிவதைப் பார்க்க முடியும். பெரும்பாலும் குதிரைக்காரர்கள் லாயம் வைத்து தீனி போடுவதில்லை என்பதுதான் இதற்குக் காரணம். காலையில் குதிரைகளுக்குக் கோதுமைத் தவிடு, கொள்ளு வைத்து சவாரிக்கு எடுத்துக்கொள்வார்கள். தீவனத்தை உண்பதற்காக தினமும் காலை நேரங்களில் பேருந்து நிலையம், படகு இல்லம், ‘நைன்த் மைல்’ போன்ற இடங்களில் குதிரைகள் தவறாமல் ஆஜராகிவிடும். இப்படி ஊட்டியில் சுமார் 150 முதல் 200 குதிரைகள் உள்ளன.

கரோனா பொது முடக்கத்திற்குப் பின்பு பூங்காக்கள் பூட்டப்பட்டு விட்டன. சவாரிக்கு யாரும் வருவதில்லை என்பதால் துவண்டு போன குதிரைக்காரர்கள் குதிரைகளைச் சுத்தமாகக் கண்டு கொள்வதில்லை. லாயம் வைத்துக் குதிரைகளைக் கவனித்துவந்த ஒரு சில குதிரைக்காரர்களும் அவற்றைக் கோயில் மாடு கணக்காய் அவிழ்த்து விட்டுவிட்டனர். முன்பெல்லாம் இந்தக் குதிரைகள் இரவில் எப்படி ஊருக்குள் சுற்றித் திரிந்தனவோ, அதேபோல் இப்போது பகலிலும் சுற்றித் திரிகின்றன.

“நம்ம எஜமான் வருவார். தவிடு, தீவனம் போடுவார்னு நம்பிக்கையோட இந்தக் குதிரைகள் இங்கே வர்ற மாதிரி இருக்கு. குதிரைக்காரர்களைத்தான் காணோம். அங்கங்கே இருக்கிறவங்க பரிதாபப்பட்டு தவிடு, கோதுமைன்னு கொடுப்பாங்க. எத்தனை நாளைக்கு அப்படிக் கொடுக்க முடியும்? இப்ப யாருமே எதுவும் கொடுக்கறதில்லை. அதனால அங்கங்கே புல்லை மேய்ஞ்சுட்டு, குப்பையப் பொறுக்கிட்டு திரியுது” என்கிறார்கள் சில இளைஞர்கள்.

பொதுமுடக்கத்தின் ஆரம்ப காலத்தில் மசினக்குடி ‘இபான்’ அமைப்பின் தன்னார்வலர்கள் ஓட்ஸ், கோதுமைத் தவிடு போன்றவற்றைக் குதிரைகளுக்குத் தீவனமாக அளித்து வந்தனர். இப்போது அவர்களாலும் இவற்றுக்குத் தீவனம் கொடுக்க முடியவில்லையாம்.

இதுகுறித்து ‘இபான்’ அமைப்பின் பொறுப்பாளரும், கால்நடை மருத்துவருமான நைஜிலிடம் பேசினேன்.

“இப்பக்கூட, ‘ஒரு குதிரை அடிபட்டுக் கிடக்குது… உடனே வாங்க’ன்னு போட் ஹவுஸ்கிட்ட இருந்து கூப்பிட்டிருக்காங்க. இந்த பொதுமுடக்கக் காலத்தில் மட்டும் அடிபட்ட, நோய்வாய்ப்பட்ட சுமார் 30 குதிரைகளுக்கு சிகிச்சை செஞ்சிருக்கோம். இதுவரைக்கும் ஏழெட்டுக் குதிரைகள் செத்திருக்கு. அதுல 4 குதிரைகள் பசியால் இறந்தன. 3 குதிரைகள் நோயால் இறந்தன. இப்பவும் 30 குதிரைகள் சாகிற நிலையில் இருக்கு. குதிரைக்காரங்க ரேஷன் கடையில அஞ்சு ரூபாய், 10 ரூபாய்க்குக் கோதுமை வாங்கி கஞ்சி வச்சு ஊத்திக்கிட்டு இருந்தாங்க. எப்படியும் ஒரு குதிரை 5 கிலோவுக்குக் குறையாம கோதுமைத் தவிடு சாப்பிடும். வருமானம் இல்லாததால அதையெல்லாம் சுத்தமா நிறுத்திட்டாங்க.

பொதுமுடக்கம் முடிஞ்சு மைசூர் போனா ரூ.20 ஆயிரத்துக்குக்கூட குதிரை வாங்கிட்டு வந்துடலாம்னு நினைக்கிறாங்க. அவங்களையும் குற்றம்சொல்ல முடியாது. பிழைப்பு இல்லாமல், அவங்களே இப்ப மூட்டை தூக்கவும், கேரட் லோடு ஏத்தவும் கூலி வேலைக்குப் போறாங்க. குதிரைகளைக் காப்பாத்தணும்ங்கிற நோக்கத்தில் கால்நடைத் துறை அதிகாரிகள்கிட்ட பேசி ஒரு மீட்டிங் ஏற்பாடு செஞ்ச மாவட்ட நிர்வாகத்தினர், ரூ.50 ஆயிரம் நிதி உதவி கொடுத்தாங்க. தனியார் முதலாளிகள் சிலர் கணிசமான தொகை தந்தாங்க.

அதை வச்சுக் கொஞ்ச காலம் தீனி வாங்கி குதிரைக்காரங்களுக்குத் தந்தோம். அது பத்து, பதினைஞ்சு நாள் கூட போதலை. இன்னைக்கு ஒரு கிலோ கோதுமைத் தவிடு ரூ.25-க்கு விக்குது. ஓட்ஸ் அதைவிட விலை அதிகம். அதுதான் இப்ப மறுபடியும் கால்நடைத் துறை மருத்துவர்களை வச்சு மறுபடி மீட்டிங் போட்டு ஏதாவது உதவக் கேட்டிருக்கோம். மாவட்ட ஆட்சியரும் உதவுவதாகச் சொல்லியிருக்கார். ஏதாச்சும் உதவி கிடைச்சாத்தான் இந்த குதிரைகளைக் காப்பாற்ற முடியும்”.

இவ்வாறு நைஜில் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x