Last Updated : 01 Jul, 2020 02:46 PM

 

Published : 01 Jul 2020 02:46 PM
Last Updated : 01 Jul 2020 02:46 PM

திருச்சியில் அதிகரிக்கும் கரோனா: மாவட்ட ஆட்சியரிடம் 9 கேள்விகளை எழுப்பிய திமுக எம்எல்ஏக்கள்

கே.என்.நேரு: கோப்புப்படம்

திருச்சி

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக திருச்சி மாவட்டத்தில் உள்ள திமுக எம்எல்ஏக்கள் 4 பேர், மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து 9 கேள்விகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

திருச்சி மாவட்டத்தில் ஜூன் 30-ம் தேதி வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 682. இதில், இதுவரை 339 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 339 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் எம்எல்ஏக்கள் அ.சவுந்திரபாண்டியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செ.ஸ்டாலின்குமார் ஆகிய 4 பேர் இன்று (ஜூலை 1) மாவட்ட ஆட்சியர் சு.சிவராசுவைச் சந்தித்து 9 கேள்விகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி: கோப்புப்படம்

அந்த மனுவில், "வட்டம் வாரியாக விவரங்களைக் குறிப்பிட்டு, திருச்சி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு? தற்போது அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெறுவோர் எத்தனை பேர்? கரோனாவால் உயிரிழந்தோர் எத்தனை பேர்? திருச்சி மாவட்டத்தில் இதுவரை கரோனா பரிசோதனை செய்யப்பட்டோர் எண்ணிக்கை எவ்வளவு?

தினமும் எத்தனை பேருக்கு அரசு மருத்துவமனைகளில் கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது? திருச்சி மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு எத்தனை பேருக்குப் பரிசோதனை செய்ய முடியும்? திருச்சி மாவட்டத்தில் கரோனா பரிசோதனை செய்யும் வசதி எந்தெந்த அரசு மருத்துவமனைகளில் உள்ளன? திருச்சி மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் கரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுவோர் எத்தனை பேர்? கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியோர் எத்தனை பேர்?" ஆகிய 9 கேள்விகள் இடம் பெற்றிருந்தன.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் கே.என்.நேரு கூறியதாவது:

"திருச்சி மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகம் பரவுவதாக தனக்குச் செய்தி வருவதாகவும், அது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சியரிடம் விவரங்களைக் கேட்டறிந்து தகவல் தெரிவிக்குமாறு கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தோம்.

இதற்கு, வெளியிடங்களில் இருந்து ரயில் மற்றும் விமானம் மூலம் வருவோர் மூலமாகவே தொற்று அதிகரித்து வருவதாகவும், கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க போதிய உட்கட்டமைப்புகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை சுமார் 400 பேர் வரை குணமடைந்துள்ளதாகவும், அறிகுறிகள் உள்ளவர்களுக்கு கரோனா பரிசோதனை, சிகிச்சைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் ஆட்சியர் பதில் அளித்தார். ஆனால், மாவட்ட ஆட்சியரின் பதிலில் எங்களுக்குத் திருப்தி இல்லை.

திருச்சி மாவட்டத்தில் ஆட்சியர், அரசு அலுவலர்கள் எடுக்கும் நடவடிக்கைகளைக் காட்டிலும் தொற்று எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது.

அதைத் தொடர்ந்து, இனி நாள்தோறும் 1,000 பேர் வரை பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் பதில் கூறினார். திருச்சியில் உள்ள கட்சியின் மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தை கரோனா நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தத் தருவதாக ஏற்கெனவே தெரிவித்துள்ளோம். இதுவரை மாவட்ட நிர்வாகம் கேட்கவில்லை. எப்போது கேட்டாலும் உடனே தந்துவிடுவோம்.

அரசு இ-பாஸ் வழங்கி வரும் நிலையில், தூத்துக்குடிக்கு உதயநிதி ஸ்டாலின் சென்ற விவகாரத்தை வேண்டுமென்ற அரசியலுக்காகப் பேசி வருகின்றனர். சாத்தான்குளம் சம்பவத்தில் தொடர்புடைய போலீஸாரைக் கைது செய்ய வேண்டும் என்று தொடக்கத்தில் இருந்தே திமுக கூறி வருகிறது".

இவ்வாறு கே.என்.நேரு தெரிவித்தார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகளிடம் கேட்டபோது, "கரோனா விவகாரத்தில் எதையும் மறைக்கவில்லை. அதேவேளையில், பெருகி வரும் கரோனாவைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x