Published : 01 Jul 2020 01:42 PM
Last Updated : 01 Jul 2020 01:42 PM

என்எல்சி விபத்து: பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படாததே காரணம்; உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு; அன்புமணி வலியுறுத்தல்

என்எல்சி விபத்தில் 5 பேர் உயிரிழப்புக்கு நிர்வாகம்தான் பொறுப்பேற்க வேண்டும் என, பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, அன்புமணி ராமதாஸ் இன்று (ஜூலை 1) வெளியிட்ட அறிக்கை:

"நெய்வேலியில் உள்ள நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 2-வது அனல்மின் நிலையத்தில் உள்ள 5-வது அலகில் இன்று கொதிகலன் வெடித்துச் சிதறிய விபத்தில், 5 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்கள் தவிர, மேலும் 14 பேர் படுகாயமடைந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். என்எல்சி அனல்மின் நிலையத்தில் நிகழ்ந்த விபத்தும், அதில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளும் வேதனையளிக்கின்றன. உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 5-வது அலகு அமைந்துள்ள பகுதியில் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அதில் ஒரு கொதிகலனில் இன்று காலைப் பணியில் சுமார் 30 தொழிலாளர்கள் பணியாற்றியதாகக் கூறப்படுகிறது. இன்று காலை திடீரென கொதிகலன் வெடித்துச் சிதறியதில், அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த பத்மநாபன், அருண், வெங்கடேசன், நாகராஜன், சிலம்பரசன் ஆகிய 5 ஒப்பந்தத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், 14 பேர் படுகாயமடைந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர, மேலும் சிலர் காயமடைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த விபத்தில் மேலும் எவரேனும் பாதிக்கப்பட்டு உள்ளார்களா? என்பது குறித்த விசாரணையும் தேடுதல் பணியும் நடைபெற்று வருகின்றன. காயமடைந்த பலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 2-வது அனல்மின் நிலையத்தில் உள்ள 6-வது அலகில் கடந்த மே மாதம் 7 ஆம் தேதி ஏற்பட்ட பாய்லர் விபத்தில் 8 தொழிலாளர்கள் காயமடைந்தனர். அவர்களில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அப்போது நான் வெளியிட்ட அறிக்கையில் பாய்லர் வெடித்த விபத்துக்குக் காரணமே அனல்மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் சரியாக நடைபெறாததுதான் என்று குற்றம் சாட்டியிருந்தேன். இப்போது ஏற்பட்ட விபத்துக்கும் அதுதான் காரணமாகும். எனது அறிவுரையை ஏற்று, அனல்மின் நிலையங்களில் பாதுகாப்புத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தால் இப்போது நடந்த விபத்தையும், 5 அப்பாவித் தொழிலாளர்களின் உயிரிழப்பையும் தவிர்த்திருக்கலாம்.

அனல்மின் நிலையங்களை 40 ஆண்டுகள் வரையிலும், சில நேரங்களில் 50 ஆண்டுகள் வரையிலும் இயக்கலாம் என்றாலும், அவற்றின் வாழ்நாள் 30 ஆண்டுகள் மட்டும்தான். 30 ஆண்டுகள் கழித்து அனல்மின் நிலையங்களைப் புதுப்பித்தால் மட்டுமே அவற்றை அதிக காலத்திற்கு இயக்க முடியும். ஆனால், இரண்டாவது அனல்மின் நிலையம் தொடங்கப்பட்டு 34 ஆண்டுகள் ஆகின்றன. அவற்றில் உள்ள 7 அலகுகளில் முதல் 3 அலகுகள் அமைக்கப்பட்டு 34 ஆண்டுகளும், அடுத்த 4 அலகுகள் அமைக்கப்பட்டு 29 ஆண்டுகளும் ஆகின்றன. ஆனாலும் அனல்மின் நிலையத்தைப் புதுப்பிப்பதற்கு என்எல்சி நிறுவனம் இதுவரை எந்த ஏற்பாடும் செய்யவில்லை.

அதுமட்டுமின்றி, அனல்மின் நிலையங்கள் ஆண்டுக்கு 45 நாட்கள் மூடப்பட்டு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். ஆனால், பல ஆண்டுகளாகவே நெய்வேலி அனல்மின் நிலையங்களில் இத்தகைய பராமரிப்புப் பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படுவதில்லை. அதனால்தான் கடந்த இரு மாதங்களில் அடுத்தடுத்து இரு விபத்துகள் ஏற்பட்டு 10 தொழிலாளர்கள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த விபத்துக்கும், உயிரிழப்புக்கும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன நிர்வாகம்தான் பொறுப்பேற்க வேண்டும்.

கொதிகலன் வெடிப்பு விபத்தில் உயிரிழந்த 5 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கும் தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். காயமடைந்த தொழிலாளர்களுக்கு உலகத்தர மருத்துவம் வழங்குவதுடன், தலா ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும். கடந்த இரு மாதங்களில் இரு விபத்துகள் ஏற்பட்டுள்ள நிலையில், மேலும் விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்க என்எல்சி வளாகத்தில் உள்ள 30 ஆண்டுகளைக் கடந்த அனைத்து மின்உற்பத்தி அலகுகளும் தற்காலிகமாக மூடப்பட வேண்டும்.

அனைத்து மின் உற்பத்தி அலகுகளிலும் பாதுகாப்புத் தணிக்கை நடத்தப்பட்டு, தகுதியுள்ள அனல்மின் உற்பத்திப் பிரிவுகளை மட்டுமே இயக்க அனுமதிக்க வேண்டும். கடந்த இரு மாதங்களில் நடைபெற்ற இரு விபத்துகள் குறித்து உயர்நிலைக் குழு விசாரணைக்கும் ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்".

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x