சமூகத்தைக் கெடுக்கும் ஆன்லைன் ரம்மி, பப்ஜி விளையாட்டுகளையும் தடை செய்க: தமிமுன் அன்சாரி கோரிக்கை

சமூகத்தைக் கெடுக்கும் ஆன்லைன் ரம்மி, பப்ஜி விளையாட்டுகளையும் தடை செய்க: தமிமுன் அன்சாரி கோரிக்கை
Updated on
1 min read

சமூகத்தைக் கெடுக்கும் ஆன்லைன் ரம்மி, பப்ஜி விளையாட்டுகளையும் தடை செய்ய வேண்டும் என்று தமிமுன் அன்சாரி எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.

சட்டம் - ஒழுங்கையும், சமூக அமைப்பையும் டிக் டாக் செயலி பாதிப்பதால் அதைத் தடை செய்ய வேண்டும் எனக் கடந்த ஆண்டே சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தார் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்எல்ஏ. அது அப்போது நாடு முழுவதும் எதிரொலித்து பலத்த விவாதங்களை ஏற்படுத்தியது.

தற்போது இந்தியாவின் நலன்களுக்கு ஊறு விளைவிப்பதாகக் கூறி மத்திய அரசு டிக் டாக் உள்ளிட்ட சீனாவின் 59 செயலிகளுக்குத் தடை விதித்திருக்கிறது. இந்த நிலையில், குழந்தைகளைப் பாதிக்கும் ஆபத்தான சில செயலிகளையும் மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்று தமிமுன் அன்சாரி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து ’இந்து தமிழ்’ இணையத்திடம் பேசிய அவர், "டிக் டாக் செயலி சட்டம் - ஒழுங்கையும், சமூக அமைப்பையும் பாதிப்பதால் அதைத் தடை செய்ய வேண்டும் என மஜக சார்பில் கடந்த ஆண்டே கோரிக்கை வைத்தேன். இப்போது அதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால், இது போன்ற தடை செய்யப்பட வேண்டிய மேலும் பல செயலிகள் இங்கு இருக்கின்றன.

அவை நமது நாட்டின் பொது சமூகத்திற்கும், வளரும் தலைமுறையின் நலன்களுக்கும் கேடு விளைவிக்கின்றன. இத்தகைய செயலிகளால், ஓடியாடி விளையாடி, ஆரோக்கியத்துடன் வளரவேண்டிய பிள்ளைகள் கழுத்து வலிக்க, கண் சிவக்க ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து வருகின்றனர்.

அவர்கள் ஆரோக்கியத்தையும், சிந்திக்கும் ஆற்றலையும் இழந்து நோயாளிகளைப் போல மாறுவது நமது சமூக அமைப்பிற்கு விடப்பட்டிருக்கும் பெரும் சவாலாகும். இதுபோன்ற செயலிகள் நம் சமூகத்தை உளவியல் ஊனமுற்றவர்களாக மாற்றிடும் ஆபத்தை உருவாக்குகின்றன.

எனவே, நம் நாட்டு மக்களின் எதிர்கால நலன் கருதி பப்ஜி, ஆன்லைன் ரம்மி போன்ற செயலிகளையும் மத்திய அரசு தடை செய்ய வேண்டும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in