

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கரோனோ சிறப்பு வார்டில் பணிபுரியும் ஆய்வக நுட்புனர்களுக்கு( Lab technician) தனிமைப்படுத்துதல் விடுப்பு தரப்படுவதில்லை எனவும், அதனால், அவர்கள் குடும்பத்தினருக்கு தொற்று பரவுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அரசு மருத்துவமனைகளில் உள்ள ‘கரோனா’ வார்டுகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வக நுட்புனர்கள் மற்றும் மருத்துவப்பணியாளர்களுக்கு சுழற்சி முறையில் பணிகள் ஒதுக்கப்படுகிறது.
அவர்கள் ‘கரோனா’ வார்டு பணி முடியும்போது அவர்களுக்கு தொற்று பரிசோதனை செய்யப்படுவதோடு தனிமைப்படுத்திக் கொள்ள விடுப்பு வழங்கப்படும். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பணிபுரியும் ஆய்வக நுட்புனர்களுக்கு
தற்போது இந்த விடுப்பு கொடுக்கப்படுவதில்லை என ஆய்வக நுட்பனர்கள்( Lab technician) அதிருப்தியடைந்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
ஆரம்ப காலத்தில் ‘கரோனா’ வார்டு முடியும்போது தனிமைப்படுத்திக் கொள்ள ஒரு வாரம் கொடுத்தார்கள். தற்போது இரண்டு மாதமாக ஒரு நாள் கூட கொடுப்பதில்லை. ஆனால் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு வழக்கம்போல் தனிமைப்படுத்திக் கொள்ள விடுப்பு தரப்படுகிறது. கரோனோ பணி முடிந்து அப்படியே வீட்டிற்கு செல்வதால் வீட்டில் உள்ள குழந்தைகள், வயதானவர்கள் ஆகியோர் அச்சப்படுகிறார்கள். யாரிடமும் வீட்டில் நெருங்கி பழக முடியவில்லை.
தனிமைப்படுத்துதல் விடுப்பு கொடுத்தால் அந்த காலத்தில் எங்களை நாங்களே தனிமைப்படுத்திக் கொண்டு அதன்பிறகு மற்ற சாதாரண வார்டு பணிக்கு போகும்போதாவது குடும்பத்தினருடன் பழக வாய்ப்பு கிடைக்கும். தற்போது தனிமைப்படுத்துதலே இல்லாமல் தொடர்ச்சியாக பணிக்கு செல்வதால் தனித்தீவில் வசிப்பதுபோல் குடும்பத்தினரை விட்டு விலகியே வீட்டில் தனித்தே இருக்க வேண்டியது.
இதுவரை தனிமைப்படுத்துதலை கவனிக்காததால் மதுரை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் 3 ஆய்வக நுட்புனர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 2 பெண் நுட்புனர்களின் கணவர்களுக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது. அததனால், கரோனோ பணி முடிந்து செல்பவர்களுக்கு ஒரு வாரம் உணவகம் மற்றும் தங்குவதற்கு விடுதியுடன் கூடிய தனிமை படுத்துதல் சிறப்பு விடுப்பு அளிக்க வேண்டும். மருத்துவமனை நிர்வாகமும், சுகாதாரத்துறை அமைச்சரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மருத்துவமைனை நிர்வாகத்திடம் கேட்டபோது, அவர்களுக்கு விடுப்பு வழங்க தற்போது அனுமதி வழங்கியுள்ளோம் என்றனர்.