Last Updated : 01 Jul, 2020 12:46 PM

 

Published : 01 Jul 2020 12:46 PM
Last Updated : 01 Jul 2020 12:46 PM

ஊரடங்கு தொடர்வதால் நீதிமன்ற இடைக்கால உத்தரவுகள் ஜூலை 31 வரை நீட்டிப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு

கரோனா ஊரடங்கு தொடர்வதால் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு உட்பட்ட அனைத்து நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள் பிறப்பித்த இடைக்கால உத்தரவுகள் ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கரோனா ஊரடங்கால் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு உட்பட்ட அனைத்து நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களின் இடைக்கால உத்தரவுகள் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.

இந்தக்காலக்கெடு நேற்றுடன் முடிந்த நிலையில் இடைக்கால உத்தரவுகளை ஜூலை 31 வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இது தொடர்பாக நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

ஏற்கெனவே சிறை கைதிகளின் பரோல் விடுமுறை ஜூன் 8 வரையும், இடைக்கால உத்தரவுகள் ஜூன் 30 வரையும் நீட்டிக்கப்பட்டது. பரோல் விடுமுறை காலத்தை நீட்டிக்க மறுக்கப்பட்டு பரோலில் சென்றவர்கள் அனைத்து கைதிகளும் ஜூன் 15-க்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்பு சரண் அடைய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

பிற இடைக்கால உத்தரவுகளை பொறுத்தவரை கரோனா பரவல் இன்னும் சரியாகவில்லை. ஊரடங்கு அமலில் இருந்த போதிலும் பரவல் அதிகரித்து வருகிறது. மாநிலங்கள் இடையே போக்குவரத்து இயக்கப்படவில்லை. எனவே அனைத்து இடைக்கால உத்தரவுகளும், குற்றவியல் நடைமுறைச் சட்டம் 167 மற்றும் 309-ன் கீழ் செய்யப்பட்ட கைதிகள் ரிமாண்ட் உத்தரவுகளும் ஜூலை 31 வரை நீட்டிக்கப்படுகிறது.

தமிழ்நாடு, புதுச்சேரியில் நடைபெற்ற குற்றங்களில் தொடர்புடையவர்கள் வெளி மாநிலங்களில் கைது செய்யப்படும் போது மாநிலங்கள் இடையே போக்குவரத்து தடை செய்யப்பட்டிருப்பதால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதில் சிரமமாக இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. இது தொடர்பாக அண்மையில் கேரளா நீதிமன்றம் ஒரு நிர்வாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி கைது செய்யப்படும் நபரை கைதாகும் இடத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் அடைக்கலாம். அவரை அங்கிருந்து வீடியோ கான்பரன்சில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினால் போதும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x