Published : 01 Jul 2020 12:32 PM
Last Updated : 01 Jul 2020 12:32 PM

பவானிசாகரில் 50 ஆயிரம் கையெழுத்து: மின்சார சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக ஓர் இயக்கம்

ஈரோடு

மத்திய அரசின் மின்சார சட்டத்திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் ஈரோடு, சத்தியமங்கலத்தில் தொடங்கியுள்ளது. பவானிசாகர் தொகுதியில் மட்டும் குறைந்தபட்சம் 50 ஆயிரம் விவசாயிகளிடம் கையெழுத்துகளைப் பெறப்போவதாகச் சூளுரைத்துக் களமிறங்கியிருக்கின்றனர் களப்பணியாளர்கள்.

சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே, இலவச மின்சார உரிமைக் கூட்டியக்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கையெழுத்து இயக்கத்தை முன்னாள் எம்.எல்.ஏவான பி.எல்.சுந்தரம் தொடங்கி வைத்தார். இவ்வமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பு, மலர் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் எஸ்.ஆர்.முத்துசாமி, ஒன்றியக் கவுன்சிலர் பற்குணன், கீழ் பவானி பாசன விவசாயிகள் சங்க நிர்வாகி மாரனூர் நடராஜ், சுப்புரவி, பீர்கடவு சந்திரன் உள்ளிட்டோர் இந்த மசோதாவால் விவசாயிகள் எதிர்கொள்ளப்போகும் பிரச்சினைகள் குறித்துப் பேசினர்.

இக்கூட்டத்தில் பேசியவர்கள், “இந்த மசோதா வேளாண் உற்பத்தி மானியத்திற்கு எதிரானதாகவும், ஒற்றை மின் விளக்கு பெற்றுள்ள ஏழைகளுக்கு எதிரானதாகவும், கைத்தறி நெசவாளர்கள், விசைத்தறிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் மின்சாரச் சலுகைகளுக்கு எதிரானதாகவும் அமைந்துள்ளது. ஆகவே, மத்திய அரசு இதை உடனே கைவிட வேண்டும். மின்சாரத்தைப் பொதுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்வதற்கு மத்திய, மாநில அரசுகள் சட்டப் பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும். கைத்தறி, விசைத்தறி மற்றும் வீடுகளுக்கு சலுகைக் கட்டண மின்சாரம், குடிசைகளுக்கு இலவச ஒற்றை விளக்கு மின்சாரம் தொடர வேண்டும்” என்று வலியுறுத்தினர்.

இதுகுறித்து, இந்தக் கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுடர் நடராஜ் நம்மிடம் கூறியதாவது:

''கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 4 லட்சம் கையெழுத்துகளைப் பெற்று பிரதமருக்கு அனுப்பும் போராட்டம் கடந்த வாரம் தொடங்கியிருக்கிறது. இந்தக் கையெழுத்து இயக்கத்தில் தமிழகம் முழுக்க பல்வேறுபட்ட 13 உழவர் அமைப்புகள் சேர்ந்துள்ளன. கரோனா காலம் என்பதால் அணி திரண்டு போராட முடியாது. அதைச் சாதகமாக வைத்துக்கொண்டு இதுபோன்ற சட்டத் திருத்தங்களை, மத்திய அரசு அவசர அவசரமாகக் கொண்டுவருகிறதோ என்று சந்தேகப்படுகிறோம். உற்பத்தி, விநியோகம், பகிர்மானம் என மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ள மின் வாரியத்தில் ஏற்கெனவே உற்பத்திப் பிரிவைத் தனியாருக்குக் கொடுத்துவிட்டார்கள். இப்போது வரப்போகும் சட்டத்திருத்தம் மூலம் மற்ற இரண்டு பிரிவுகளும் தனியாருக்குப் போய்விடும் என்பது நிஜம்.

இதனால் விவசாயம், விசைத்தறிகள் எல்லாம் கடுமையாகப் பாதிக்கப்படும். விவசாயத்திற்கு இலவச மின்சாரம் என்பதை அறவே ஒழிக்கப் பார்க்கிறார்கள். இனிமேல் இலவச மின்சாரம் பெற்றுவரும் விவசாய நிலங்களிலும் மின் மீட்டர் பொருத்தப்படும். அதில் வரும் தொகைக்கு பில் வரும். அதை விவசாயி செலுத்திவிட்டால் அவர் வங்கிக் கணக்குக்கு அதுவே மானியமாக அளிக்கப்பட்டுவிடும் என்கிறார்கள். அது எப்படி? இப்போது எரிவாயு மானியம் வங்கிக்கணக்கில் செலுத்துவதாக அரசு சொல்லிய பிறகு அதில் எத்தனை பேர் பயன்பெறுகிறார்கள். யாரெல்லாம் பெறாமல் போனார்கள் என்பது தெரியும். அதே கதி இலவச மின்சாரத்துக்கும் ஏற்படலாம். இதை விவசாயிகள் அனுமதிக்க மாட்டார்கள்.

விவசாயத் தோட்டத்தில் மீட்டர் போனால் எந்த அளவு பிரச்சினை ஏற்படும் என்பதும் அரசுக்குத் தெரியும். அதனால்தான் இப்போது ஏதாவது ஒரு மாவட்டத்திலாவது இந்த மின் மீட்டர் ரீடிங், பில் கட்டணம், வங்கியில் மானியம் என்ற திட்டத்தைச் சோதனை முறையில் செய்து பார்க்கச் சொல்லி, தமிழக அரசை மத்திய அரசு வற்புறுத்துவதாகப் பேச்சு உள்ளது. இது விவசாயிகள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. பவானி சாகர் தொகுதியில் 2 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அதில் 70 சதவீதம் பேர் விவசாயிகளே. அதனால் இந்த இயக்கத்திற்கு இங்கே 50 ஆயிரம் கையெழுத்து என்பது அதிசயமில்லை''.

இவ்வாறு சுடர் நடராஜ் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x