பால் உற்பத்தியாளர்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை கிடைக்க வேண்டும்; வாசன் வலியுறுத்தல்

ஜி.கே.வாசன்: கோப்புப்படம்
ஜி.கே.வாசன்: கோப்புப்படம்
Updated on
1 min read

பால் உற்பத்தியாளர்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை கிடைக்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (ஜூலை 1) வெளியிட்ட அறிக்கை:

"தமிழக மக்களின் அன்றாட அத்தியாவாசிய தேவையான பாலை தமிழக அரசுக்கு சொந்தமான ஆவின் நிறுவனமும் பல்வேறு தனியார் நிறுவனங்களும் பூர்த்தி செய்து வருகின்றன. இதில் ஆவின் நிறுவனம் 30 லட்சம் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து ஒரு லிட்டர் பாலின் விலை ரூ.32 ஆக நிர்ணயம் செய்து நாள்தோறும் 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

அதே போல், தனியார் நிறுவனங்கள் 20 லட்சம் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து ஒரு லிட்டர் பாலின் விலை ரூ.34 ஆக நிர்ணயம் செய்து நாள்தோறும் 1 கோடி லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆவின் விலையை விட தனியார் நிறுவனங்களின் கொள்முதல் விலை ரூ.2 அதிகம் என்பதால் பலர் தனியார் நிறுவனங்களுக்கு பால் விற்றார்கள். ஆனால். கரோனா தொற்று பரவலுக்குப் பிறகு தனியார் நிறுவனங்கள் பால் கொள்முதல் விலை ரூ.34-ல் இருந்து ரூ.20 ஆக குறைத்து விட்டார்கள். தனியார் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ.14 குறைத்ததால் பால் உற்பத்தியாளர்களுக்கு மிகுந்த மனவேதனையும் பெரும் நஷ்டமும் ஏற்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்களின் பால் விலைக் குறைப்பை எதிர்த்துதான் பால் உற்பத்தியாளர்கள் பாலை தரையில் கொட்டிப் போராட்டம் நடத்தினார்கள். கரோனா தொற்றை காரணம் காட்டி பால் கொள்முதல் விலையை ரூ.34-ல் இருந்து ரூ.20 ஆக குறைத்து நிர்ணயம் செய்து இருப்பது நியாயமில்லை.

ஆவின் நிறுவனம் வழங்குவது போல் தனியார் பெரு நிறுவனங்களும் லிட்டருக்கு ரூ.32 ஆக வழங்க வேண்டும். இதனால் பால் உற்பத்தியில் ஈடுப்பட்டுள்ள பல லட்சம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படும். பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கைகளை பரிசீலித்து அவர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்"

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in