

திருப்பூர் மாவட்டம் உடுமலை குடிமங்கலத்தைச் சேர்ந்தவர் பிரபு (25). மாவட்ட ஆயுதப் படையில் காவலராகப் பணியாற்றி வந்த இவர், காங்கயம் காவல் நிலைய பணியில் ஈடுபட்டிருந்தார். நேற்று முன்தினம் இரவு திட்டுப்பாறை சோதனைச் சாவடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, நொய்யல் சோதனைச் சாவடி வழியாக வந்த கன்டெய்னர் லாரி, தடுப்புகள் மற்றும் கார் மீது மோதிவிட்டு காங்கயம் சாலையில் வந்து கொண்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, திட்டுப்பாறை சோதனைச் சாவடியில் அந்த லாரியை நிறுத்த காவலர்கள் தயாராக இருந்தனர். ஆனால், அங்கும் நிற்காமல் சென்ற லாரியை, இருசக்கர வாகனத்தில் பிரபு துரத்திச் சென்றார். அவங்காளிபாளையம் பிரிவு பகுதியில் எதிர்பாராதவிதமாக அந்த லாரி மீது மோதியதில் பிரபு உயிரிழந்தார்.
தகவலறிந்த காங்கயம் ரோந்து வாகன போலீஸார், ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில் லாரியை மடக்கிப் பிடித்து ஓட்டுநரான ராமநாதபுரம் பாஸ்கரன் (40) என்பவரை கைது செய்தனர்.