

கிருஷ்ணகிரி நகராட்சியில் துப்புரவு ஆய்வாளராக பணியாற்றி வருபவர் செந்தில்குமார்(45). இவர் கடந்த மே 27-ம் தேதி கரோனா வைரஸ் தடுப்புப் பணிக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டார். அங்கு பணியாற்றி வந்த துப்புரவு ஆய்வாளருக்கு கடந்த மாதம் 15-ம் தேதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது சொந்த ஊரான சேலத்துக்குச் சென்று அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், 14 நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார். கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த செந்தில்குமார், நேற்று கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகத்துக்கு வந்தார்.
அவருக்கு நகராட்சி ஆணையர் சந்திரா பூங்கொத்து கொடுத்து வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். கரோனாவில் இருந்து குணமடைந்த செந்தில்குமார், நேற்று நகராட்சி பணியாளர்களுக்கு, கரோனா நோய்த்தொற்றில் இருந்து எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்ளவது, நோய் எதிர்ப்பு சக்தியை எவ்வாறு அதிகப்படுத்திக் கொள்வது என்பது குறித்து எடுத்துரைத்தார். செந்தில்குமார் கரோனாவில் இருந்து குணமடைந்தாலும், மேலும் 14 நாட்களுக்கு வீட்டில் தனிமையில் இருக்கும்படி நகராட்சி ஆணையர் அறிவுறுத்தினார்.