

இல்லந்தோறும் வரும் களப்பணியாளர்களிடம் கரோனா அறிகுறிகள் இருந்தால் ஒளிவு மறைவின்றி தெரிவிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்குசென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை ரிப்பன் மாளிகையில் கரோனா தொற்று தொடர்பாக பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்க செயல்பட்டு வரும் தொலைபேசி ஆலோசனை மையத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மாநகராட்சி களப்பணியாளர்கள் இல்லந்தோறும் சென்று, அங்குள்ளவர்களின் உடல் வெப்பநிலையை குறித்துக் கொண்டு, கரோனா அறிகுறிகள் உள்ளதா என்று கண்டறிந்து வருகின்றனர்.
இவ்வாறு, வரும் களப்பணியாளர்களிடம் அறிகுறிகள் இருந்தால் ஒளிவுமறைவின்றி தெரிவிக்கும்படி பொதுமக்களை கேட்டுக் கொள்கிறேன்.
தகவல் ஸ்டிக்கர்
முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைபிடிப்பதன் அவசியம், மண்டலவாரியாக தொலைபேசி எண்கள், கட்டுப்பாட்டு அறை எண்கள் உள்ளிட்ட தகவலை குறிப்பிட்டு அச்சிடப்பட்டுள்ள ஸ்டிக்கர்களை சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு வீட்டிலும் ஒட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று தொடர்பாக தற்கொலை எண்ணங்கள், எதிர்மறை எண்ணங்கள் நிறைய உள்ளன. சளி, காய்ச்சலைப் போன்றுதான் கரோனா பாதிப்பும். பிறர் தவறாக நினைப்பார்களோ என்ற பயத்தை தூர தூக்கி எறிய வேண்டும்.
ஆயிரக்கணக்கானோருக்கு எதிர்மறை எண்ணங்களை தடுத்து அவர்கள் ஆரோக்கிய மனநிலையைப் பெற உதவியுள்ளோம். ரிப்பன் மாளிகையில் செயல்படும் ஆலோசனை மையத்தை தொடர்பு கொள்ள 044- 46122300, 044-25384520 என்றஎண்களில் பொதுமக்கள் அழைக்கலாம்.
இவ்வாறு மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் கூறினார்.