

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தன்னை மாநகராட்சி நிர்வாகம் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லவில்லை எனபெண் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
சென்னை பாடி பகுதியைச் சேர்ந்த ரஜினி பிரியா என்ற பெண்,முதல்வருக்கு புகார் தெரிவிக்கும்வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
கடந்த 4 நாட்களுக்கு முன்பு எனக்கு தொண்டை வலி, சளி பிரச்சினை இருந்தது. பின்னர் சந்தேகத்தின்பேரில் தனியார் ஆய்வகத்தில் ஜூன் 28-ம் தேதி கரோனா பரிசோதனை செய்தேன். அதில் கரோனா தொற்று உறுதியானது.
இந்த விவரம், ஐசிஎம்ஆர், சென்னை மாநகராட்சி ஆகியவற்றுக்கு உடனே சென்றுவிடும். அவர்கள் சிகிச்சைக்குரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று ஆய்வக நிர்வாகம் தெரிவித்தது. மாநகராட்சி நம்மை அழைத்துச் சென்று உரியசிகிச்சை அளிக்கும் என்று நம்பிக்கையோடு இருந்தேன். ஆனால்,சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல மாநகராட்சியினர் வரவில்லை. இப்போது எனக்கு கடும் தலைவலிஏற்பட்டுள்ளது. மருந்து கடையிலும் மருந்து தர மறுக்கிறார்கள்.
மறுநாளும் (ஜூன் 29) மாநகராட்சியிலிருந்து யாரும் வரவில்லை. நானாக, எங்கள் தெருவுக்கு வந்த களப் பணியாளர்களிடம், எனக்கு கரோனா இருப்பதாகத் தெரிவித்தேன். ஆனால் அவர்களோ, வீட்டில் என்னைக் கவனித்துக்கொண்டு இருந்த கணவர் மற்றும் மாமியாரை பரிசோதனைக்காக அழைத்துச் சென்றுவிட்டனர். இப்போது எனக்கு உணவு கொடுக்கக்கூட ஆள் இல்லை. மாநகராட்சியின் இதுபோன்ற செயலால்தான் சென்னையில் கரோனா தொற்றும், உயிரிழப்பும் அதிகரித்துள்ளது.
இவ்வாறு வீடியோவில் அந்தப் பெண் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறிய தாவது:
பரிசோதனையின்போது அப்பெண் கொடுத்த முகவரியில் திருவள்ளூர் மாவட்டம் என குறிப்பிட்டுள்ளார். அதன் காரணமாக சென்னை மாவட்ட கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் பட்டியலில் அவர் பெயர் இடம்பெறவில்லை. அவர் மாநகராட்சி அலுவலர்களிடம் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, தற்போது அவர்ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
53 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரோனா பாதித்தவர்களை மாநகராட்சி கையாண்டுள்ளது. இதுவரைஇதுபோன்ற பிரச்சினை ஏற்பட்டதில்லை. பரிசோதனையின்போது பொதுமக்கள் சரியான முகவரியை தெரிவித்தால் இதுபோன்ற குழப்பங்களைத் தவிர்க்கலாம்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
முதல்வருக்கு நன்றி
மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அப்பெண் வெளியிட்ட மற்றொரு வீடியோவில், “தனக்கு சிறப்பான சிகிச்சை கிடைத்து வருகிறது. அதற்கு காரணமான முதல்வர் பழனிசாமி, சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.