Published : 01 Jul 2020 07:00 AM
Last Updated : 01 Jul 2020 07:00 AM

10-ம் வகுப்பு மாணவர்களின் உயர்கல்விக்கு உதவித்தொகை வழங்கும் தகவல் தவறானது: ‘இன்போசிஸ்’ நிறுவனம் விளக்கம்

10-ம் வகுப்பு மாணவர்களின் உயர்கல்விக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக வெளியான செய்திக்கு ‘இன்போசிஸ்’ நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

‘இந்து தமிழ்’ நாளிதழில், ‘10-ம் வகுப்பு முடித்த ஏழை மாணவர்களின் உயர்கல்விக்கு உதவும் பிரேரானா தொண்டு நிறுவனம்’ என்ற தலைப்பில் ஜூன் 28-ம் தேதி செய்தி வெளியானது.

அதில் முன்னணி ஐடி நிறுவனமான ‘இன்போசிஸ்’ நிதி உதவியுடன் ‘பிரேரானா’ அமைப்பு இயங்குவதாக கூறப்பட்டிருந்தது. தற்போது அந்த செய்தியில் இடம்பெற்ற தகவல்கள் அனைத்தும் தவறானவை என்று ‘இன்போசிஸ்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ‘இன்போசிஸ்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாகி (மக்கள் தொடர்பு) மெஹக் சாவ்லா அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

‘இன்போசிஸ்’ அறக்கட்டளை மற்றும் தொண்டு நிறுவனம் தொடர்பாக சமீபத்தில் ‘இந்து தமிழ்’ நாளிதழில் வெளியான செய்தியில் இடம்பெற்ற தகவல்கள் தவறானதாகும். இது நீண்டகாலமாக பரவிவரும் வதந்தியாகும்.

இத்தகைய தவறான செய்திகள் கடந்த காலத்திலும் வெளிவந்துள்ளன. அதுதொடர்பாக ஏற்கெனவே எங்கள் நிறுவனம் சார்பில் பொதுவான விளக்கம் வெளியிடப்பட்டது.

அதேபோல் ‘இன்போசிஸ்’அறக்கட்டளை மேற்கொண்டுவரும் சமூகநலப் பணிகளுக்கு முழுமையாக சொந்த நிதியை மட்டுமே பயன்படுத்துகிறது. எனவே, எங்கள் நிறுவனத்தின் பெயரில் ஏதேனும் போலியான அல்லது தவறான செய்திகள் பரவினால் அதை பொதுமக்கள் நம்பவேண்டாம். மேலும், அந்த செய்திகள் தொடர்பாக 080-26635199 என்ற தொலைபேசி எண் அல்லது foundation@infosys.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x