‘பாரத் நெட்’ திட்டம் 2021 பிப்ரவரியில் செயல்படுத்தப்படும்; ஸ்டாலின் அறிக்கைகளால் மக்கள் அச்சம்: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு

‘பாரத் நெட்’ திட்டம் 2021 பிப்ரவரியில் செயல்படுத்தப்படும்; ஸ்டாலின் அறிக்கைகளால் மக்கள் அச்சம்: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு
Updated on
1 min read

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிக்கைகளால் மக்கள் அச்சமடைந்து வருவதாக அமைச்சர்ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து544 கிராமங்களிலும் ரூ.1,950 கோடி மதிப்பில் அதிவேக இணையஇணைப்பு அளிப்பதற்கான ‘பாரத்நெட்’ என்ற திட்டத்தை செயல்படுத்த கருவிகள் கொள்முதலுக்கு ஒப்பந்தம் விடப்பட்டது. இந்நிலையில், ஒப்பந்த விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை என மத்தியவர்த்தகத் துறை அமைச்சகம் ஒப்பந்தத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், குறைகளை களைந்து மீண்டும் ஒப்பந்தம் கோரும்படியும் தெரிவித்தது. தற்போது மீண்டும் ஒப்பந்தம் கோருவதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது.

இந்நிலையில் சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களை நேற்று சந்தித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:

தமிழகத்தில் அரசு எடுத்த பாதுகாப்பு நடவடிக்கைகளால் கரோனா இறப்பு விகிதம் குறைக்கப்பட்டு உள்ளது. எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் தான் சொல்லும் ஆலோசனைகளை முதல்வரோ, தமிழக அரசோ கேட்கவில்லை என்று பழிசுமத்தியுள்ளார். அவருக்கே ஆலோசனை வழங்க ஆள்பிடித்திருக்கும் நிலையில், அவர்எவ்வாறு அரசுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்க முடியும்.

கரோனா விவகாரத்தில் முதல்வருக்கு நல்ல பெயர் கிடைத்துவிடும் என்பதை தாங்கிக் கொள்ள முடியாமல் வீட்டில் இருந்து கொண்டுஒரு நாளைக்கு பத்து அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.

‘பாரத் நெட்’ திட்டம் நிறைவேறினால் கேபிள் டிவி நிறுவனங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்பதால் ஆரம்பத்திலேயே முடக்க முயற்சிக்கின்றனர். இத்திட்டத்துக்கான ஒப்பந்தப்புள்ளி முடிப்பதற்கான அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்ட நிலையில், ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு முன்னுரிமை வழங்குவது முழுவதுமாக கடைபிடிக்கப்படவில்லை என கூறி டெண்டரை மத்திய அரசு நிறுத்தி வைத்தது.

இப்போது திருத்திய நிபந்தனைகளுடன் மறு ஒப்பந்தம் கோரலாம் என கூறப்பட்டுள்ளது. இதில் எந்தவிதத்தில் ஊழல் நடந்துள்ளது என்பதற்கான ஆதாரத்தை எதிர்க்கட்சித் தலைவர் கூறவில்லை. உயிர் பயத்தில் இருக்கும் மக்களுக்கு அவரது அறிக்கையில் எந்தஆறுதல் வார்த்தையும் இல்லை; அச்சம்தான் ஏற்படுகிறது. ‘பாரத்நெட்’ திட்டத்தில் மிக விரைவாகஒப்பந்தம் கோரப்பட்டு 2021 பிப்ரவரிக்குள் பணிகள் முடிக்கப்படும். பொதுத்தேர்தலுக்கு முன் மக்கள் இதன் பயனை பெறுவார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in