

சென்னையின் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் மாற்றப்பட்டுள்ள நிலையில், புதிய காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சென்னையின் கூடுதல் ஆணையர் உள்ளிட்ட பல பொறுப்புகளில் இருந்துள்ளார்.
சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் 15-ம் தேதி பதவி ஏற்று, மூன்றாண்டுகளை நிறைவு செய்தார். இந்நிலையில் புதிய காவல் ஆணையராக செயலாக்கப் பிரிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் (48) நியமிக்கப்பட்டுள்ளார்.
மகேஷ்குமார் அகர்வால் 1994-ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். இவர் சட்டம் பயின்றவர். சொந்த மாநிலம் பஞ்சாப் ஆகும். தந்தையும் வழக்கறிஞர் என்பதால் சட்டம் பயின்று பின்னர் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி 22 வயதில் ஐபிஎஸ் அதிகாரியாகப் பொறுப்பேற்றார்.
தேனி எஸ்.பி., தூத்துக்குடி எஸ்.பி., 2001-ல் சென்னை பூக்கடை துணை ஆணையர், சென்னை போக்குவரத்து காவல் தெற்கு துணை ஆணையர் எனப் பொறுப்பு வகித்த அவர் பின்னர் சொந்த மாநிலமான பஞ்சாப் மாநிலத்தில் சிபிஐ எஸ்.பி.யாக அயல்பணியில் சென்றார்.
7 ஆண்டுகள் சிபிஐ அதிகாரியாக பஞ்சாப், ஹரியாணா, ஜம்மு காஷ்மீரில் பணியாற்றியுள்ளார். பின்னர் ஐஜியாகப் பதவி உயர்வுபெற்று தமிழகம் திரும்பிய அவர், சிபிசிஐடி ஐஜியாகப் பதவி வகித்தார். பின்னர் மதுரை காவல் ஆணையராகச் சென்றார். மீண்டும் சிபிசிஐடி ஐஜியாகப் பதவி ஏற்றார்.
பின்னர் சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையராகப் பொறுப்பேற்றார். பின்னர் செயலாக்கப் பிரிவு ஏடிஜிபியாக இருந்த அவர் தற்போது சென்னையின் இளம் காவல் ஆணையராகப் பொறுப்பேற்றுள்ளார்.
மகேஷ்குமார் அகர்வாலுக்குத் திருமணமாகி மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். மனைவி துணைப் பேராசிரியராக சென்னையில் பணியாற்றுகிறார்.