Published : 30 Jun 2020 10:51 PM
Last Updated : 30 Jun 2020 10:51 PM

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம்: ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் கண்டனம் 

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரண விவகாரத்தில் நாடு முழுவதும் கண்டனம் வலுத்து வரும் நிலையில் அகில இந்திய ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கமும் கண்டனம் தெரிவித்து உரிய விசாரணை நடத்தி நியாயம் கிடைக்கச் செய்யவேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

தூத்துக்குடி சாத்தான்குளத்தில் பென்னிக்ஸும் அவரது தந்தை ஜெயராஜும் செல்போன் கடையைத் திறந்து வைத்திருந்ததால் வந்த விவகாரத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்டு காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் காயங்களுடன் கோவில்பட்டி கிளைச்சிறையில் அனுமதிக்கப்பட்டதில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். போலீஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்டதில் இருவரும் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த இருவர் மரணத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாகக் கண்டித்தன. தூத்துக்குடி மக்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தினர். சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய அனைவரும் கோரிக்கை வைத்தனர். உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன் வந்து வழக்கைக் கையில் எடுத்து விசாரித்து வருகிறது.

மாநில மனித உரிமை ஆணையமும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வழக்கு விசாரணைக்குச் சென்ற குற்றவியல் நடுவர் பாரதிதாசனை மிரட்டியதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து எஸ்.பி. பாலகோபாலன், ஏஎஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.

மாஜிஸ்திரேட் விசாரணைக்கு போலீஸ் ஒத்துழைப்பு தரவில்லை என்ற புகாரில் நடவடிக்கை எடுக்க மதுரை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. சாத்தான்குளம் காவல் நிலையத்தை வருவாய்த்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக வட்டாட்சியர் செந்தூர்ராஜன் நியமிக்கப்பட்டார்.

இந்த நிகழ்வு காவல்துறையில் பெரிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. அகில இந்திய அளவில் இந்த வழக்கு போகும் தன்மையை உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள் அதனால் பலரும் இதன் மீது கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் அகில இந்திய ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் இந்த விவகாரத்தில் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு:

“போலீஸ் காவலில் உள்ள குடிமக்களுக்கு எதிரான வன்முறைச் செயல்களை நாங்கள் கண்டிக்கிறோம். தூத்துக்குடி மாவட்டத்தின் வழக்கை விரைவாகவும் நியாயமாகவும் விசாரிக்க விசாரணை நிறுவனங்களுக்கு நாங்கள் அறிவுறுத்துகிறோம்”.

இவ்வாறு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x