

உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சாத்தான்குளம் காவல் நிலையம் வருவாய் துறையினர் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.
இங்குள்ள தடயங்கள், ஆவணங்களை 24 மணி நேரமும் பாதுகாக்க இரண்டு அதிகாரிகளை மாவட்ட ஆட்சியர் நியமித்துள்ளார். இந்நிலையில் கோவில்பட்டி நீதித்துறை நடுவர் பாரதிதாசன் காவல் நிலையத்தில் மீண்டும் விசாரணை நடத்தினார்.
சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தானாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.
தந்தை, மரணம் தொடர்பாக கோவில்பட்டி கிளை சிறை, அரசு மருத்துவமனை, சாத்தான்குளம் காவல் நிலையம், அரசு மருத்துவமனை மற்றும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளிடம் விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்க கோவில்பட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் பாரதிதாசனுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.
அதன்பேரில் நீதித்துறை நடுவர் பாரதிதாசன் கடந்த 28-ம் தேதி சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினார். அப்போது அங்கு இருந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. இது தொடர்பாக குற்றவியல் நீதித்துறை நடுவர் பாரதிதாசன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் புகார் செய்தார்.
வருவாய் துறை கட்டுபாடு:
இதையடுத்து சாத்தான்குளம் காவல் நிலையத்தை, மாவட்ட ஆட்சியர் வருவாய் துறையினர் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, அங்குள்ள தடயங்கள், ஆவணங்களை பாதுகாக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் சாத்தான்குளம் காவல் நிலையம் இன்று வருவாய் துறையினர் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.
இந்த காவல் நிலையத்தில் உள்ள தடயங்கள், ஆவணங்களை 24 மணி நேரமும் பாதுகாக்க சாத்தான்குளம் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் செந்தூர்ராஜன் மற்றும் துணை வட்டாட்சியர் சுவாமிநாதன் ஆகியோரை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நியமித்துள்ளார். அவர்கள் இருவரும் காவல் நிலையத்துக்கு வந்து தடயங்கள், ஆவணங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறும்போது, மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவின் பேரில் சாத்தான்குளம் காவல் வருவாய் துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்காக 2 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 24 மணி நேரமும் 2 ஷிப்ட் அடிப்படையில் பணியில் இருப்பார்கள். உயர்நீதிமன்றத்தில் இருந்து மறு உத்தரவு வரும் வரை இவர்கள் பணியில் இருப்பார்கள் என்றார் ஆட்சியர்.
தடயவியல் நிபுணர்கள் ஆய்வு:
சாத்தான்குளம் காவல் நிலையம் வருவாய் துறையினர் கட்டுப்பாட்டில் வந்ததை தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் அங்கு ஆய்வு செய்தனர். தடய அறிவியல் துறை திருநெல்வேலி துணை இயக்குநர் விஜய லதா, தூத்துக்கடி உதவி இயக்குநர் கலா லெட்சுமி ஆகியோர் தலைமையில் தடயவியல் நிபுணர் குழுவினர் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சுமார் 1 மணி நேரம் ஆய்வு நடத்தினர். மேலும், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரது கடைகளிலும் அவர்கள் தடயங்களை சேகரித்தனர்.
விடுப்பில் சென்றா் மருத்துவர்:
இதற்கிடையே ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் சிறையில் அடைக்க மருத்துவ சான்றிதழ் வழங்கிய சாத்தான்குளம் அரசு மருத்துவமனை மருத்துவர் விணிலா 15 நாள் மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டார். ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரை கோவில்பட்டி கிளை சிறையில் அடைப்பதற்கு முன்னால் போலீஸார் சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது அவர்களை பரிசோதித்து மருத்துவர் விணிலா சான்று அளித்துள்ளார். அதில் இருவருக்கும் லேசான காயங்கள் மற்றம் ரத்த அழுத்தம் இருந்ததாக தெரிவித்துள்ளார். ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் உயிரிழந்ததை தொடர்ந்து மருத்துவர் விணிலா 4 நாட்களாக பணிக்கு வராமலே இருந்தார். இந்நிலையில் அவர் 15 நாட்கள் மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டார். இது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நீதித்துறை நடுவர் மீண்டும் விசாரணை:
இந்நிலையில் கோவில்பட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் பாரதிதாசன், இன்று பிற்பகல் 1.45 மணியளவில் மீண்டும் சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு வந்தார். வியாபாரிகளான ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக மீண்டும் தனது விசாரணையை அவர் தொடங்கினார்.
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஏற்கனவே பணியாற்றிய காவலர்களை ஒவ்வொருவராக வரவழைத்து அவர் விசாரணை நடத்தினார். இந்த விசாரணை இரவு வரை தொடர்ந்தது. அப்போது வட்டாட்சியர் செந்தூர்ராஜன், துணை வட்டாட்சியர் சுவாமிநாதன் ஆகியோர் காவல் நிலையத்தில் இருந்தனர். சாத்தான்குளம் வியாபாரிகள் மரணத்தில் அடுத்தடுத்த புதிய திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. இது காவல் துறையினருக்கு தொடர்ந்து நெருக்கடிகளை ஏற்படுத்தி வருவது குறிப்பிடதக்கது.
சாத்தான்குளம் அரசு மருத்துவமனையிலும் விசாரணை:
காவல் நிலையத்தில் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்திய நீதித்துறை நடுவர் பாரதிதாசன், தொடர்ந்து சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினார். ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்பு அவர்களுக்கு நடந்த மருத்துவ பரிசோதனை தொடர்பாக விசாரணை நடத்திய நீதித்துறை நடுவர், இது தொடர்பான மருத்துவ ஆவணங்களை ஆய்வு செய்தார்.