Last Updated : 30 Jun, 2020 08:50 PM

 

Published : 30 Jun 2020 08:50 PM
Last Updated : 30 Jun 2020 08:50 PM

காவலர்கள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல!- ’சோளகர் தொட்டி’ நாவலாசிரியரும் வழக்கறிஞருமான ச.பாலமுருகன் பேட்டி

ச.பாலமுருகன் | கோப்புப் படம்.

சாத்தான்குளம் காவல் நிலையத்தில், தந்தையும் மகனும் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம், சமகாலத்தில் நடந்திருக்கும் மிகப் பெரிய அவலம். கரோனா பொதுமுடக்க விதிமுறைகளைக் கண்டிப்பாக நடைமுறைப்படுத்துவதற்காகக் களமிறக்கப்பட்ட காவல்துறையினரில் ஒரு சிலர் இப்படியான அத்துமீறலில் ஈடுபட்டிருப்பது பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இது தொடர்பான விவாதங்கள், காவல் நிலைய மரணங்கள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தியிருக்கின்றன. இது தொடர்பாக, ‘சோளகர் தொட்டி’ நாவலாசிரியரும் வழக்கறிஞரும் மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் (பி.யூ.சி.எல்) உறுப்பினருமான ச.பாலமுருகனிடம் பேசினேன்.

உங்கள் நாவலில் காவலர்களின் அடக்குமுறைக்கு ஆளான பழங்குடி மக்களின் வேதனையைப் பதிவுசெய்திருந்தீர்கள். தொலைத்தொடர்பு வசதிகள், சமூக ஊடகங்கள் வளர்ந்துவிட்ட இக்காலத்தில் சாத்தான்குளம் நிகழ்வு போன்ற சம்பவங்கள் நடப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

‘சோளகர் தொட்டி’ நாவல் எழுதப்பட்டது பழங்குடி மக்கள் எதிர்கொண்ட சித்ரவதையைப் பதிவுசெய்ய அங்கு சென்ற அனுபவத்தின் அடிப்படையில்தான். சத்தியமங்கலம் உள்ளிட்ட வனப் பகுதிகளில் வீரப்பன் தேடுதல் வேட்டையில் காவல்துறையினர் நிகழ்த்திய அத்துமீறல்களைப் பதிவுசெய்தோம். அது தொடர்பான வழக்கு விசாரணையை நீர்த்துப்போகச் செய்ய காவல் துறையினர் தங்களாலான முயற்சிகளை மேற்கொண்டார்கள். காவல்துறைக்குக் கட்டற்ற அதிகாரம் இருப்பதாகக் கட்டமைக்கப்படும்போது இப்படித்தான் நடக்கும்.

அதன் உச்சம்தான் சாத்தான்குளம் சம்பவம். பழங்குடி மக்கள் எதிர்கொண்ட துன்பங்கள், பல வருடங்கள் கழித்துதான் வெளியுலகத்துக்குத் தெரியவந்தது. அம்மக்களிடம் நாங்கள் தகவல்கள் திரட்டியது, சதாசிவம் ஆணையம் அமைக்கப்பட்டது என்பன போன்ற பல கட்டங்களைத் தாண்ட வேண்டியிருந்தது. இன்று நகரப் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், சமூக ஊடகங்கள், ஊடகங்களின் உதவியுடன் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. எனினும், ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரின் உயிரைக் காப்பாற்ற முடியாதது வேதனை.

காவல் துறையினரால் ஒருவர் அழைத்துச் செல்லப்படும் சூழலில் வழக்கறிஞரை அழைத்துக்கொள்ள உரிமை உண்டு. அதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சட்ட நிபுணர்கள் சொல்கிறார்கள். வழக்கறிஞர்கள் எந்த அளவுக்கு உதவ முடியும்?

அப்படியான சூழலில் வழக்கறிஞர்கள் மூலம் சட்ட உதவி கிடைக்கும் என்பதெல்லாம் நடைமுறையில் உள்ளதுதான். ஒரு வழக்கறிஞர் காவல் நிலையத்துக்குச் சென்று பேச முடியும். இந்த வழக்கில்கூட ஒரு வழக்கறிஞர் காவல் நிலையத்துக்குச் சென்றிருக்கிறார். ஆனால், அவரது வார்த்தைகள் அங்கு எடுபடவில்லை. அவர் முன்பாகவே ஜெயராஜையும், பென்னிக்ஸையும் அடித்திருக்கிறார்கள். சொல்லப்போனால் அவரே நேரடி சாட்சியாக இருந்திருக்கிறார். அது தொடர்பாகச் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பதிவு செய்திருக்கிறார்.

இரவு முழுவதும் சித்ரவதை தொடர்ந்ததாகப் பலரும் இப்போது சொல்கிறார்கள். அதைத் தடுத்திருக்க வாய்ப்பே இல்லையா?

இதுபோன்ற ஒரு மனித உரிமை மீறல் நடக்கும்போது, அதை ஒரு பெரிய விஷயமாக உயரதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுசென்றிருக்க வேண்டும். மக்கள் ஒன்றுதிரண்டு போராடியிருக்க வேண்டும். அது தொடர்பான கவனத்தை உருவாக்கியிருக்க வேண்டும். இந்த அளவுக்கு நடக்காது என்று நம்பியிருக்கிறார்கள். அந்த நம்பிக்கை வீணாகிவிட்டது.

துறைரீதியான சிறிய தண்டனைகளைத் தாண்டி குற்றவியல் தண்டனைகளுக்குக் காவலர்கள் உட்படுத்தப்படுவது குறைவு என்று புகார்கள் இருக்கின்றனவே?

தவறு செய்யும் காவலர்கள் மீது பெரும்பாலும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை என்பது உண்மைதான். அதேசமயம், சட்டத்துக்கு முன்னால் அனைவரும் சமம் என்று அரசமைப்புச் சட்டத்தின் 14-வது சட்டக்கூறு தெளிவாகக் கூறியிருக்கிறது. இதில் காவல் துறையினருக்கோ, அரசு ஊழியர்களுக்கோ விதிவிலக்கு ஏதும் இல்லை. காவலர் ஒருவர் பாலியல் வன்முறையில் ஈடுபடுகிறார் என்றாலோ, யாரையும் அடித்துத் துன்புறுத்துகிறார் என்றாலோ அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஏனென்றால், அவை சட்டவிரோதச் செயல்கள்.

இப்படியான சூழலில், சம்பந்தப்பட்ட காவலர் மீது நடவடிக்கை எடுக்க மேலதிகாரியின் அனுமதி தேவையில்லை. இந்தியாவில் இருக்கும் சட்டங்களைப் பொறுத்தவரை, யாரும் யாரையும் அடித்துத் துன்புறுத்துவது என்பது சட்டப்படி அங்கீகரிக்கப்படாதது. கொலை போன்ற குற்றங்கள் பிடிக்கக்கூடிய குற்றங்கள் (Cognizable offence) என்று அழைக்கப்படுகின்றன. இதுபோன்ற குற்றங்களை இழைப்பவர்கள் மீது புகார்கள் வரும்போது, உடனடியாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவுசெய்யப்பட வேண்டும் என்பது கட்டாயமான நடைமுறை. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவுகள் சொல்வது அதைத்தான். உச்ச நீதிமன்றத்தின் பல தீர்ப்புகளும் அதைச் சொல்லியிருக்கின்றன. அவற்றின் அடிப்படையில் உயர் நீதிமன்றங்களும் பல உத்தரவுகளை வழங்கியிருக்கின்றன.

இந்த வழக்கைப் பொறுத்தவரை, ஜெயராஜின் மனைவி புகார் அளித்திருக்கிறார். தனது கணவரும், மகனும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் மிக மோசமாகச் சித்ரவதை செய்யப்பட்டு, அதன் தொடர்ச்சியாக உயிரிழந்திருக்கிறார்கள் என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார். இது பிடிக்கக்கூடிய குற்றம். உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டும்.

காவல் நிலைய மரணங்கள் தொடர்புடைய வழக்குகளில் காவலர்கள் தண்டனையை எதிர்கொள்வது என்பது மிக அரிதாகவே நடக்கிறது என்று குற்றம் சாட்டப்படுகிறதே?

இதுபோன்ற வழக்குகளில், சம்பந்தப்பட்ட காவல் துறையினர் தண்டனைக்குள்ளாவது மிகக் குறைவு. தமிழகத்தில் மிக மிகக் குறைவு. 2001 முதல் 2018 வரையிலான காலட்டத்தில் நாடு முழுவதும் 1,727 காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்திருப்பதாகவும், 26 காவலர்கள் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் ஊடகங்களில் வெளியான செய்திகள் சொல்கின்றன. தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரமும் கிட்டத்தட்ட இதே எண்ணிக்கையைச் சொல்கிறது. இவர்களில் 1,400-க்கும் மேற்பட்டோர் உடல்நிலை சரியில்லாமல் அல்லது இயற்கைக் காரணங்களால் மரணமடைந்துவிட்டதாகக் கூறப்பட்டிருக்கிறது.

காவல் நிலைய மரணங்கள் தொடர்பான வழக்குகள் இப்படி நீர்த்துப்போவதற்கு என்ன காரணம்?
இதுபோன்ற வழக்குகளைப் பதிவுசெய்வது காவல் துறையைச் சேர்ந்த ஏதோ ஓர் ஏஜென்சிதான் என்பது முதல் காரணம். உள்ளூர்க் காவல் நிலையம் வழக்குப் பதிவுசெய்து விசாரிக்கலாம். அல்லது சிபிசிஐடி விசாரணை நடத்தப்படலாம். சிபிசிஐடி விசாரணை ஒப்பீட்டளவில் நேர்மையாக நடக்கும் எனலாம். எப்படிப் பார்த்தாலும் காவல் நிலைய மரணங்கள் தொடர்பான சாட்சிகள், இறுதியில் பிறழ் சாட்சிகளாக மாற்றப்படுவதற்கான எல்லா வேலைகளும் நடக்கும். சாட்சிகளுக்குச் சட்டரீதியான பாதுகாப்பு இல்லை என்பது கவனிக்கத்தக்கது. அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் போன்றவை இறுதி வரை உறுதுணையாக நின்றால்தான் இதுபோன்ற வழக்குகளில் நீதி கிடைக்கும்!

காவல் நிலையத்துக்குக் கொண்டு வரப்படுபவர்களை எப்படி நடத்த வேண்டும் என்பது தொடர்பான சட்டங்களும் உச்ச நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளும் உள்ளதாக சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியிருக்கிறார். நடைமுறையில் அவை பின்பற்றப்படாததற்கு என்ன காரணம்?

தாங்கள் சட்டத்துக்கு மேலானவர்கள் என்ற மனநிலை பொதுவாகவே காவல் துறையினர் மத்தியில் இருக்கிறது. அப்படியான ஒரு மனநிலை கட்டமைக்கப்பட்டிருக்கிறது. காவல் துறையைச் சேர்ந்தவர்கள் எத்தனை தவறுகள் செய்தாலும், அவர்களைச் செல்லப் பிள்ளைகளாக வைத்துக்கொள்ளும் போக்கு ஆட்சியாளர்களிடம் இருக்கிறது. ஒரு அரசியல் பிரச்சினையை, ஜனநாயகப் பிரச்சினையைக் கையாள்வதில் ஆட்சியாளர்களுக்கு நிறைய சங்கடங்கள் இருக்கின்றன. எனவே, அதை ஒரு சட்டம்-ஒழுங்கு பிரச்சினையாக மாற்றிவிட்டால், அதை எளிதாகத் தீர்த்துவிடலாம் என்று அவர்கள் கருதுகிறார்கள். இதைத் தங்களுக்குச் சாதகமாகச் சில காவலர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். எதற்கெடுத்தாலும் அடி எனும் போக்கு இருப்பது இதனால்தான்.

அதேசமயம், பல்வேறு அழுத்தங்களை எதிர்கொள்ளும் காவலர்கள், அவற்றைக் கையாள முடியாமல் பொதுமக்கள் மீது கோபத்தைக் காட்டுவதாகச் சொல்லப்படுகிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

எல்லாத் துறைகளிலும் அழுத்தம், மன உளைச்சல் இருக்கிறது. பத்திரிகையாளர்கள் நள்ளிரவு வரை வேலை பார்க்க வேண்டியிருக்கிறது. நீதிமன்றப் பணியாளர்கள் காலை 9 மணிக்கு வந்தால் இரவு 9 மணி வரை வேலை பார்க்கிறார்கள். எனவே, இப்படிச் சொல்லி தப்பித்துக்கொள்ள முடியாது. இது ஏற்கத்தக்க காரணமே அல்ல. தங்களுக்கு இருக்கும் அழுத்தங்கள் குறித்து காவல் துறையினர்தான் முன்வந்து பேச வேண்டும்.

‘உங்களுக்கு இருக்கும் கோபத்தை எங்கள் மீதுதான் காட்ட வேண்டுமா?’ என்று மக்கள் கேட்பது நியாயமானது. ஜெயராஜும், பென்னிக்ஸும் என்ன தவறு செய்தார்கள்? தங்களுக்கு இப்படியெல்லாம் நடக்கும் என்று இருவரும் சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அவர்களை அழைத்துச் சென்று அடித்துக் கொல்ல, மன உளைச்சலைக் காரணம் காட்ட முடியுமா, விசாரணைக்குச் செல்லும் நீதிபதியிடம் தகாத வார்த்தைகளைப் பேச முடியுமா?

கரோனா காலத்தில் காவல் துறையினரின் அதிகாரங்கள் எப்படி இந்த அளவுக்குக் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன? அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியில் வருபவர்களை எந்தக் கேள்வியும் கேட்காமல் அடிப்பதற்கு எந்த மாதிரியான உத்தரவுகள் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன?

கரோனா பரவல் என்பது ஒரு சுகாதாரப் பிரச்சினை. ஆனால், ‘கரோனாவுக்கு எதிரான போர்’ என்றே ஆரம்பத்திலிருந்தே இந்தப் பிரச்சினை கட்டமைக்கப்பட்டுவிட்டது. அந்த வார்த்தையே தவறானது. போர் என்று சொல்லி இதை ஒரு சட்டம் - ஒழுங்கு பிரச்சினையாக மாற்றிவிட்டார்கள். எனவே, மருந்து வாங்க வெளியில் வருபவர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் என்று யாரைப் பார்த்தாலும் அடிப்பது என்று பல காவலர்கள் இறங்கிவிட்டார்கள். 8 மணிக்கு மேல் கடையைத் திறக்கக்கூடாது என்று அடிக்கிறார்களே, அதுவரை கரோனா தொற்று ஏற்படாதா? 8.05-க்குத்தான் கரோனா தொற்றிக் கொள்ளுமா?

போலீஸ் நண்பர்கள் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்? இவர்களுக்குச் சட்டரீதியான அங்கீகாரம் உண்டா?

இது சட்டவிரோதமான அமைப்பு. காவல் துறை இப்படியான குழுக்களை வைத்து அவர்கள் மூலம் அதிகாரம் செய்வது, அவர்களைப் பயன்படுத்தித் தாக்குவது என்பன போன்ற விஷயங்கள் தடை செய்யப்பட்டிருக்கின்றன. சத்தீஸ்கரில் நக்ஸலைட்டுகளை ஒழிப்பதற்காக சல்வா ஜுடூம் எனும் அமைப்பை அம்மாநில அரசு ஏற்படுத்தியது. இது பாஜக, காங்கிரஸ் என்று இரு கட்சிகளின் ஆதரவுடனும் அமைக்கப்பட்டது. அந்த அமைப்பு இதுபோன்ற வேலைகளைச் செய்துவந்தது. அதை எதிர்த்து நந்தினி சுந்தர் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், “காவல் துறையானது எந்த ஒரு குழுவையும் அமைத்துக்கொண்டு காவல் பணிபுரிவது சட்டவிரோதமானது. அது தடைசெய்யப்பட வேண்டும்” என்று தெளிவாகக் குறிப்பிட்டது.

ஆக, ‘காவல்துறை நண்பர்கள்’ என்ற பெயரில் ஒரு குழுவை வைத்துக்கொண்டு, அவர்களை வைத்து காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்படுபவர்களை அடிப்பது சட்டவிரோதம். இந்தக் குழுக்களில் இருப்பவர்கள், காவல் துறையிடம் இருக்கும் தொடர்பை முன்வைத்து கட்டப் பஞ்சாயத்து செய்வதாகச் சொல்லப்படுகிறது. இதில் சாதியக் கும்பல்கள், மதவாதக் கும்பல்கள் இருக்கின்றன.

காவல் துறையில் சீர்திருத்தம் எந்த அளவுக்குச் சாத்தியம்?

இந்தியாவில் காவல் துறை என்பது, 1861-ம் ஆண்டு காவல் துறை சட்டத்தின்படி, காலனி ஆதிக்கத்துக்கு ஏற்ப உருவாக்கப்பட்டது. காவல் துறை சீர்திருத்தம் தொடர்பாக நீதிபதி கஜேந்திர கட்கர், உள்துறைச் செயலராக இருந்த பத்மநாபன் தலைமையிலான ஆணையம் என்று பல ஆணையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. எனினும் எந்த ஆணையத்தின் பரிந்துரையும் சட்ட வடிவம் பெறவில்லை. மொத்தத்தில் காவல் துறை ஜனநாயகப்படுத்தப்படவில்லை. காலனி ஆதிக்க மனநிலையைப் பிரதிபலிக்கும் விதமாகவே இன்றும் தொடர்கிறது. இதை மாற்ற, காமன்வெல்த் இனிஷியேட்டிவ் போன்ற தொண்டு நிறுவனங்கள் மேற்கொண்ட முயற்சிகளும் வெற்றி பெறவில்லை!

இவ்வாறு ச.பாலமுருகன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x