

மதுரையில் இன்று (ஜூன் 30) 257 பேர் ‘கரோனா’ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 208 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் நேற்று முன்தினம் 303 பேருக்கு ‘கரோனா’ தொற்று ஏற்பட்டிருந்தது. 609 நோயாளிகள் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பிருந்தனர்.
29 பேர் உயிரிழந்து இருந்தனர். இந்நிலையில் நேற்று 257 பேர் ‘கரோனா’ தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இவர்களோடு சேர்த்து மதுரை மாவட்டத்தில் மொத்தம் 2,557 பேர் இதுவரை ‘கரோனா’ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர்.
இன்று மாலை வரை பாதிக்கப்பட்டோரில் 817 நோயாளிகள் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். குறிப்பாக இன்று ஒரே நாளில் மட்டும் 208 நோயாளிகள் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சிகிச்சையில் குணமடைந்து வீடுதிரும்புவோர் அதிகரித்து வருகின்றனர். பாதிக்கப்பட்டோரில் 80 சதவீதம் பேர் எந்த அறிகுறியும் இல்லாமல் உள்ளனர்.
அதனால், அறிகுறி இல்லாத நோயாளிகளை வீடுகளிலே தனிமைப்படுத்தி சிகிச்சை பெறுவதற்கு அனுமதிக்கலாமா? என்று மதுரை மாநகராட்சியும், சுகாதாரத்துறையும் ஆலோசித்து வருகிறது.
அப்படி அனுமதிக்கும்பட்சத்தில் அவர்களுக்கான மருந்து மாத்திரைகள் மெடிக்கல் ஸ்டோர்களில் கிடைப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.