

மதுரை சித்த மருத்துவர் கண்டுபிடித்துள்ள புதிய சித்த மருந்து பொடியில் கிருமியை கட்டுப்படுத்தும் சக்தி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த சித்த மருத்துவர் எஸ்.சுப்பிரமணியன், கரோனா வைரஸை கட்டுப்படுத்த 66 மூலிகைகள் உள்ளடங்கிய இம்ப்ரோ என்ற பொடியைத் தயாரித்துள்ளார்.
இந்தப் பொடியை தண்ணீரில் கொதிக்க வைத்து தினமும் இரு வேளை உணவு சாப்பிடுவதற்கு முன்பு குடித்து வந்தால் கரோனா நோயிலிருந்து விடுபடலாம். இந்தப் பொடியை நுண்ணுயிர் ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் சுப்பிரமணியன் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் கண்டுபிடித்துள்ள இம்ப்ரோ மருந்தை ஆய்வு செய்வதற்காக சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, அலோபதி மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும். இந்தக்குழு முன்பு மனுதாரர் ஜூன் 26ல் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர்.
அதன்படி மருத்துவ நிபுணர் குழு முன்பு டாக்டர் சுப்பிரமணியன் ஆஜராகி தான் தயாரித்த மருந்து குறித்த அனைத்து விபரங்களையும் விளக்கினார். இவரது விளக்கத்தை ஏற்றுக்கொண்ட மருத்துவ குழுவினர் அடுத்தக்கட்ட ஆய்வுக்கு அரசுக்கு பரிந்துரை செய்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது சுகாதாரத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், மனுதாரர் தயாரித்துள்ள மருந்தில் கலக்கப்பட்டுள்ள சேர்க்கையின் அறிவியல் பின்னணியை ஆய்வு செய்தபோது அதில் கிருமிகளை கட்டுப்படுத்தும் சக்தி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது மேல் நடவடிக்கைக்காக இம்ப்ரோ மருந்து மத்திய ஆயுர்வேதம் சித்த ஆராய்ச்சி கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.