

மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே துக்க நிகழ்வுக்குச் சென்றவர்களில் 58 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து, தொற்று கண்டறியப்பட்டவர்கள் வசித்த பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, அங்கு நோய்த் தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே ஒரு கிராமத்தில் 31 வயது ஆண் ஒருவர் உயிரிழந்தார். அந்தத் துக்க நிகழ்வுக்கு அதே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட ஏராளமானோர் சென்று வந்தனர். அவர்களில், மருத்துவர் இருவர் உள்பட 4 பேருக்கு நேற்று (ஜூன் 29) கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
இது தொடர்பாக சுகாதாரத் துறையினர் விசாரணை நடத்தி துக்க நிகழ்வுக்குச் சென்று வந்த 73 பேருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தினர். அதில் 58 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது இன்று (ஜூன் 30) கண்டறியப்பட்டது.
இதுகுறித்து சுகாதாரத் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் கூறுகையில், "துக்க நிகழ்வுக்குச் சென்று வந்தவர்களில் 58 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு லேசான அறிகுறிகளே உள்ளன. எனவே, அவர்கள் மேச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள 'கரோனா கேர் சென்டரில்' தங்க வைக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேலும், கரோனா தொற்று கண்டறியப்பட்டவர்கள் வசித்த நகர்ப்புற பகுதி மற்றும் கிராமப்புற பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, அங்கு நோய்த்தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்றார்.
இதனிடையே, சேலம் மாநகராட்சியில் உள்ள அம்மாபேட்டை நகர்ப்புற சுகாதார நிலையத்தில் பணியாற்றிய மருத்துவர் மற்றும் செவிலியர் என இருவருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டு, அவர்கள் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர்.
இதனிடையே, சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருபவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 500-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களில் நேற்று 34 பேரும், இன்று 7 பேரும் சிகிச்சையில் குணமடைந்து, அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.