Published : 30 Jun 2020 05:56 PM
Last Updated : 30 Jun 2020 05:56 PM

இளம் வயதினரை அதிகம் பாதிக்கும் கரோனா: மதுரையில் 21 வயது முதல் 50 வயதிற்குட்பட்ட 60 சதவீதம் பேர் பாதிப்பு 

மதுரையில் ‘கரோனா’வுக்கு 21 வயது முதல் 50 வயதிற்குட்பட்டோர் மட்டும் 61 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

‘கரோனா’ நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த முதியவர்களையும், குழந்தைகளையுமே அதிகம் பாதிக்கும் என்று உள்ளூர் மருத்துவர்கள் முதல் உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவ நிபுணர்கள் வரை அறிவுறுத்தினர். ஆனால், மதுரை மாநகராட்சிக்குட்பட்டப் பகுதியில் மொத்த ‘கரோனா’ பாதிப்பில் இளம் வயதினரே அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது சுகாதாரத் துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் சென்னை மண்டலத்தை தாண்டி மதுரையில்தான் ‘கரோனா’ பாதிப்பு அதிகமாக உள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு அடுத்து 4 இடத்தில் மதுரை மாவட்டத்தில் 2,302 பேர் ‘கரோனா’வுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 18-ம் தேதி வரை மாவட்டத்தில் 495 பேர் மட்டுமே தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். கடந்த 10 நாட்களில் மட்டும் 1,807 பேர் இந்த தொற்று நோயால் மதுரை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில், மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டகளில் வசிப்போர்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 26ம் தேதி வரை மதுரை மாநகராட்சியில் மட்டும் 1,104 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 710 ஆண்கள், 391 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மட்டும் 53 பேர் அடங்குவர். 1 வயது முதல் 10 வயதிற்குட்பட்டவர்கள் 35 பேரும், 11 வயது முதல் 20 வயதிற்குட்பட்டவர்கள் 76 பேரும், 21 வயது முதல் 30 வயதிற்குட்பட்டவர்கள் 225 பேரும், 31 வயது முதல் 40 வயதிற்குட்பட்டவர்கள் 221 பேரும், 41 வயது முதல் 50 வயதிற்குட்பட்டவர்கள் 221 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 51 வயது முதல் 60 வயதிற்குட்பட்டவர்கள் 176 பேரும், 61 வயது முதல் 70 வயது வரை 95 பேரும், 71 வயது மதல் 80 வயது வரை 44 பேரும், 90 வயது முதல் 90 வயது வரை 8 பேரும் இந்த தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த புள்ளி விவரங்கள் அடிப்படையில் பார்த்தால் இந்த தொற்று நோய் யாரை அதிகம் பாதிக்காது என்று மருத்துவத்துறை வல்லுநர்கள் கூறினார்களோ அவர்கள்தான் அதிகம் பாதித்துள்ளது. குறிப்பாக 21 வயது முதல் 30 வயது, 31 வயதுமுதல் 40 வயது, 40 வயது முதல் 50 வயதினரை இந்த தொற்று நோய் அதிகம் பாதித்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி சுகாதாரத்துறையினர் கூறுகையில், ‘‘ஊரடங்கிலும், ஊரடங்கு தளர்வு ஏற்பட்டப்பிறகும் 21 வயது முதல் 50 வயதிற்குட்டோர்தான் அதிகம் வெளியே நடமாடினர். அவர்கள் வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்வது முதல் அன்றாட வேலை நிமித்தமாகவும் வெளியே சென்று வந்துள்ளனர்.

மேலும், எவ்வளவுதான் விழிப்புணர்வு செய்தாலும் அவர்கள் நமக்கெப்படி வரும் என்ற அசாத்திய தைரியத்தில் முககவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவது போன்றவற்றை சரியாக பின்பற்றுவதில்லை. வீட்டில் இருக்காமல் இளைஞர்கள் நண்பர்களையும், உறவினர்களையும் சந்திக்க அடிக்கடி செல்கின்றனர்.

‘கரோனா’ தொற்று பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களை எளிதாக பாதிக்கும். ஆனால், அதற்காக வெளியே செல்லும் இளைஞர்களை பாதிக்காது என்பது அர்த்தமில்லை, ’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x