

ஏழைகளுக்கு 5 மாதங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்படும் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பை பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வரவேற்றுள்ளார்.
இது தொடர்பாக, அன்புமணி ராமதாஸ் இன்று (ஜூன் 30) வெளியிட்ட அறிக்கை:
"கரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு நடைமுறையில் இருப்பதாலும், அடுத்தடுத்துப் பண்டிகைகள் வருவதாலும் நாடு முழுவதும் உள்ள 80 கோடி மக்களுக்கு அடுத்த 5 மாதங்களுக்கு 5 கிலோ அரிசி அல்லது கோதுமை, ஒரு கிலோ பருப்பு வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். மிகவும் நெருக்கடியான காலத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த உதவி மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.
கரோனா பரவல் அச்சம் காரணமாக ஊரடங்கு நடைமுறையில் இருப்பது மட்டுமின்றி, எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் வேலைவாய்ப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன. பல மாநிலங்களில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதி முழுவதும் மக்களுக்கு வேலை வழங்கியதால் செலவழிந்து விட்ட நிலையில், வாழ்வாதாரத்திற்கு வழியின்றி மக்கள் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நேரத்தில் இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் அடுத்த 5 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் வெளியிட்டுள்ள அறிவிப்பு, இந்தியாவிலுள்ள ஏழைகள், இடம் பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் பசிக்கொடுமையை ஓரளவாவது போக்கும் என்பது உறுதி.
தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். கடந்த காலங்களில் கடைப்பிடித்ததைவிட, இனிவரும் நாட்களில் தேவையின்றி வெளியில் செல்வதைத் தவிர்ப்பது, முகக்கவசம் அணிவது, கையுறைகளை அணிவது, வெளியில் சென்று வரும்போது கைகளைச் சோப்பு நீரால் தூய்மையாகக் கழுவதுவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கைகளை தமிழக மக்கள் தீவிரமாகக் கடைப்பிடிக்க வேண்டும்; அதன் மூலம் கரோனா பரவலைத் தடுக்க ஒத்துழைக்க வேண்டும்".
இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.