Last Updated : 30 Jun, 2020 05:24 PM

 

Published : 30 Jun 2020 05:24 PM
Last Updated : 30 Jun 2020 05:24 PM

திருச்சியில் முதியவரைத் தாக்கிய தலைமைக் காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்

திருச்சி எம்ஜிஆர் சிலை ரவுண்டானா அருகே சைக்கிளில் வந்த முதியவரைத் தாக்கிய தலைமைக் காவலர்.

திருச்சி

திருச்சியில் சைக்கிளில் வந்த முதியவரைத் தாக்கிய தலைமைக் காவலரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து காவல் ஆணையர் வி.வரதராஜூ உத்தரவிட்டுள்ளார்.

திருச்சி எம்ஜிஆர் சிலை ரவுண்டானா அருகே நேற்று (ஜூன் 29) மதியம் ஒரு இருசக்கர வாகனமும், சைக்கிளும் மோதிக்கொண்டன. அப்போது நடைபெற்ற வாக்குவாதத்தின்போது சைக்கிளில் வந்த முதியவரை, இருசக்கர வாகனத்தில் வந்த சீருடை அணிந்த காவலர் தாக்கிவிட்டுச் செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

இதையடுத்து முதியவரைத் தாக்கிய காவலர் குறித்து விசாரணை நடத்துமாறு காவல் ஆணையர் வி.வரதராஜூ உத்தரவிட்டார். அதன்பேரில் எம்ஜிஆர் சிலை ரவுண்டானா, ஐயப்பன் கோயில் சாலை ஆகியவற்றில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து போலீஸார் ஆய்வு செய்தனர். அதில் அவர், உறையூர் சட்டம், ஒழுங்கு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரியும் இளங்கோ என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் காவல்துறை உயரதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, அந்த முதியவர் தகாத வார்த்தைகள் பேசியதாகவும், அதன் காரணமாக அவரை அடித்ததாகவும் இளங்கோ விளக்கம் அளித்தார்.

எனினும், சீருடை அணிந்துகொண்டு பொது இடத்தில் தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கூறி இளங்கோவை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து காவல் ஆணையர் வி.வரதராஜூ இன்று (ஜூன் 30) உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x